UPDATED : டிச 31, 2025 01:31 AM
ADDED : டிச 31, 2025 01:30 AM

சென்னை: தமிழகத்தில் செயல்படும் விண்வெளி தொழில்நுட்ப துறை சார்ந்த, 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு, பங்கு முதலீடு வழங்க, 'டி.என்.,ஸ்பேஸ் டெக் பண்டு' எனப்படும், தமிழக விண்வெளி தொழில்நுட்ப நிதி திட்டத்தை, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் துவக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நிறுவனங்கள், மூன்றாம் தரப்பு அதாவது துணிகர மற்றும் ஏஞ்செல் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டியிருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், டி.பி.ஐ.ஐ.டி., எனும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு, அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை பங்கு முதலீடு வழங்கப்பட உள்ளது. ராக்கெட் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் உருவாக்கம், புவி கண்காணிப்பு தீர்வு, செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் உள்ளிட்ட விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் விண்ணப்பம் செய் யலாம்.
இத்திட்டத்துக்காக, நடப்பு நிதியாண்டில் 10 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், பலருக்கு இதுகுறித்து தெரியவில்லை.
எனவே, தமிழக விண்வெளி தொழில்நுட்ப நிதி திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை, வரும், ஜனவரி 2ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, 'ஆன்லைனில்' ஸ்டார்ட்அப் டி.என்., நடத்த உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், 'form.startuptn.in/ATNS' தளத்தில் பதிவு செய்துவேண்டும்.

