'செமிகண்டக்டர்' நிறுவனங்களுக்கு கோவை சூலுாரில் பொது வசதி மையம்
'செமிகண்டக்டர்' நிறுவனங்களுக்கு கோவை சூலுாரில் பொது வசதி மையம்
ADDED : செப் 20, 2025 12:32 AM

சென்னை:கோவை மாவட்டம், சூலுாரில் 'செமிகண்டக்டர்' தொழில் நிறுவனங்களுக்காக அமைக்கப்படும் தொழில் பூங்காவில், 50 கோடி ரூபாயில் பொது வசதி மையத்தை, 'டிட்கோ' நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசகரை நியமிக்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள சூலுார் மற்றும் பல்லடத்தில் தலா, 100 ஏக்கரில் 'செமிகண்டக்டர்' தொழில் பூங்காவை, 'டி ட்கோ' அமைக்க உள்ளது.
தற்போது, சூலுாரில் அமைக்கப்பட உள்ள 'செமிகண்டக்டர்' தொழில் பூங்காவில் பொது வசதி மையம் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசகரை நியமிக்க டிட்கோ, 'டெண்டர்' கோரியுள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த பொது சேவை மையம் ஆய்வகம், வடிவமைப்பு மையம், பயிற்சி மற்றும் திறன் மையம் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
இதை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு 'செமி கண்டக்டர்' உற்பத்தி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் உள்ளிட்டவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வரும், 2026 ஜனவரியில் துவங்கி, விரைவாக பொது சேவை மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.