சேவை கட்டணத்தை குறைக்குமாறு வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., வலியுறுத்தல்
சேவை கட்டணத்தை குறைக்குமாறு வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., வலியுறுத்தல்
ADDED : செப் 20, 2025 12:36 AM

மும்பை:பல்வேறு நிதி சேவைகளுக்கான கட்டணங்களை குறைக்க வேண்டுமென வங்கிகளை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரப்பில் தகவல் அனுப்பியுள்ளதாகவும், அதில் நடுத்தர மக்கள், சிறுதொழில்கள் பெறும் வங்கி சேவைகள் மற்றும் கடன்களுக்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியுள்ளதாவும், மும்பையில் ஆர்.பி.ஐ., அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
டெபிட் கார்டு, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிப்பு, தாமத பண செலுத்தல் ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணத்தை வங்கிகள் குறைக்க வேண்டும் என ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
தனிநபர் கடன், சிறுதொழில் கடன் ஆகியவற்றுக்கான பரிசீலனைக் கட்டணத்தையும் குறைப்பதன் வாயிலாக, நடுத்தர மக்கள் மற்றும் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சுமை குறைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறைந்த வருவாய் பிரிவினர், எளிதாக வங்கி சேவைகளை பெறுவதற்கும் கட்டணக் குறைப்பு அவசியம் என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி, குறிப்பிட்ட சேவைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்ற பரிந்துரை ஏதும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
கட்டண நிர்ணயத்தை வங்கிகளின் விருப்பத்துக்கே விட்டுள்ள போதிலும், சேவைக் கட்டணங்கள் அதிகமாக விதிக்கப்படக் கூடாது என்றும் வங்கிகளை அது வலியுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுதொழில் கடனுக்கு 0.5 முதல் 2.5 சதவீதம் வரை பரிசீலனை கட்டணம் வசூல்
சில வங்கிகள், வீட்டுக் கடனுக்கு 25,000 ரூபாய் வரை பரிசீலனை கட்டணம் வசூலிக்கின்றன
குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காவிட்டால், வங்கிகள் அதிக கட்டணம் பிடித்தம் செய்கின்றன
ஜூனில் முடிந்த காலாண்டில், கட்டணங்கள் வாயிலாக வங்கிகள் 51,060 கோடி ரூபாய் வசூல்
முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டைவிட கட்டண வசூல் 12 சதவீதம் உயர்வு