/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மகசூல் அள்ளித்தரும் கம்பு வீரிய ஒட்டு ரகம்
/
மகசூல் அள்ளித்தரும் கம்பு வீரிய ஒட்டு ரகம்
PUBLISHED ON : செப் 10, 2025

மக்காச்சோளம், சோளத்திற்கு அடுத்து கம்புப் பயிர் அதிக பரப்பில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலை 2023ல் வெளியிட்ட கோ.எச் 10 வீரிய ஒட்டு கம்பு ரகம் மானாவாரி, இறவை சாகுபடிக்கு ஏற்றது.
குறைந்த இடுபொருட்களுடன் மானாவாரியிலும் நல்ல விளைச்சல் தரும். இதற்கு 250 முதல் 350 மி.மீ மழை போதும். 85 மதல் 90 நாட்களில் முதிர்ச்சியடையும், குருத்து ஈ தாக்குதலை தாங்கும் திறனுடையது. அடிச்சாம்பல் மற்றும் குலை நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டது. மேலும் திரட்சியான விதைகள், நீளமான கதிர்கள் உடையது.
புரட்டாசி (செப்.,-அக்.,) பட்டத்தில் மானாவாரியிலும், ஆடி (ஜூன், ஜூலை), சித்திரை (ஏப்ரல் - மே) பட்டங்களில் இறவையிலும் கம்பு பயிரிடலாம்.
விதைநேர்த்தி எர்காட் நோயால் பாதிக்கப்பட்ட விதைகளை நீக்குவதற்காக விதைப்பதற்கு முன், பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ சாதாரண உப்பை கரைத்து அதில் விதைகளை இடவேண்டும். கரைசலில் மிதக்கும் விதைகளை அகற்றிய பின், மூழ்கியுள்ள நல்ல விதைகளை 3 முறை தண்ணீரில் கழுவி நிழலில் உலர்த்த வேண்டும். இவை வறட்சியைத் தாங்கி வளர்வதற்காக கடினப்படுத்த வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் பொட்டாசியம் குளோரைடு உப்பு அல்லது 30 கிராம் சோடியம் குளோரைடு உப்பு கலந்த கரைசலில் ஒரு கிலோ விதையை 16 மணி நேரம் ஊற வைத்து பின்னர் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். அல்லது விதைப்பதற்கு முன் ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளுடன் 110 மில்லி டி.என்.ஏ.யு., (பல்கலை) விதை அமிர்தத்தை மெதுவாக ஊற்றி குச்சியால் கலக்கி 30 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
பயிர் இடைவெளி விதைகளை 45 செ.மீ., க்கு 15 செ.மீ., என்ற பயிர் இடைவெளியில் விதைத்தால் நல்ல காற்றோட்டம் கிடைத்து அதிக மகசூல் கிடைக்கும். மண் பரிசோதனை செய்து உரம் இடவேண்டும். மேலும் 12.5 கிலோ சிறுதானிய நுண்ணுாட்ட கலவையை 37.5 கிலோ மணலுடன் கலந்து வயலில் சீராகத் துாவ வேண்டும். கம்பு விதைத்த 15ம் நாள் மற்றும் 30ம் நாட்களில் களை எடுப்பது அவசியம்.
விதைக்கும் நேரம், பூக்கும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவங்களில் மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீர்ப்பாய்ச்சவேண்டும்.
நோய் மேலாண்மை வீரிய ஒட்டு ரகம் அடிச்சாம்பல் நோய் எதிர்ப்புத் திறன் கொண்டிருந்தாலும் பருவச் சூழ்நிலை அடிச்சாம்பல் நோய்க்கு சாதகமாக இருக்கும் காலத்தில் ஒரு ஏக்கருக்கு 200 கிராம் மெட்டலாக்ஸில் மற்றும் 200 கிராம் மேன்கோசெப் அல்லது 400 கிராம் மேன்கோசெப் தெளிக்க வேண்டும்.
எர்காட் எனப்படும் “தேன் அழுகல்” நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 200 கிராம் கார்பென்டாசிம் அல்லது மேன்கோசெப் 400 கிராம் வீதம் 5 முதல் 10 சதவீத பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் 50 சதவீத பூக்கும் தருணத்தில் ஒரு முறை தெளிக்க வேண்டும். கதிர்கள் 85 முதல் 90 நாட்களில் முதிர்ச்சியடையும். காய்ந்து முற்றிய பின் அறுவடை செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை உத்திகளை கடைப்பிடித்தால் ஒரு ஏக்கருக்கு இறவையில் 12 குவிண்டால், மானாவாரியில் 8 குவிண்டால் மகசூல் கிடைக்கும்.
-கருணா ஜெபா மேரி உதவி பேராசிரியை வேளாண்மை பொறியியல் துறை
மங்கையர்க்கரசி பொறியியல் கல்லுாரி, மதுரை