/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மஞ்சள் கிழங்கு ஊறுகாயில் அசத்தும் பொய்கை எப்.பி.ஓ.,
/
மஞ்சள் கிழங்கு ஊறுகாயில் அசத்தும் பொய்கை எப்.பி.ஓ.,
மஞ்சள் கிழங்கு ஊறுகாயில் அசத்தும் பொய்கை எப்.பி.ஓ.,
மஞ்சள் கிழங்கு ஊறுகாயில் அசத்தும் பொய்கை எப்.பி.ஓ.,
PUBLISHED ON : செப் 10, 2025

ஈரோடு பவானி வட்டார விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கவுந்தம்பாடியில் உருவாக்கப்பட்டது பொய்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (எப்.பி.ஓ.,).
750 விவசாயிகள் தலா ரூ.2000 பங்குத்தொகையுடன் நபார்டு வங்கியின் ரூ.15 லட்சம் மானியத்துடன் 2021ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் நாப்கான், இமைகள் அறக்கட்டளையின் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுகிறது. இதன் சேர்மன் பொன்னுசாமி, சி.இ.ஓ., பாரதி பூபதி.
பாரம்பரிய மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கருப்புக்கவுனி, கருங்குறுவை, காட்டுயானம் அரிசி ரகங்களும் திணை, ராகி, கம்பு, வெள்ளைச்சோளம், வரகு, குதிரைவாலி, சாமை சிறுதானிய வகைகளும் மஞ்சள், தேங்காய் சார்ந்த பொருட்களும் இங்கு அதிகம் உற்பத்தியாகின்றன. இந்த விவசாயிகள் ஒருங்கிணைந்து தொடங்கிய பொய்கை நிறுவனத்தின் சிறப்பு குறித்து விளக்குகிறார் அதன் செயலாளர் நந்திவர்மன்.
இங்கு அதிகம் விளைவது மஞ்சள், தேங்காய் தான். தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டியப் பொருளாக தேங்காய் சிப்ஸ், தேங்காய் பால்கோவா, உடனடி சட்னி மிக்ஸ், வேர்க்கடலை, தேங்காய் சட்னி மிக்ஸ் தயாரித்து உள்ளூர் மார்க்கெட்டில் விற்கிறோம்.
நாங்கள் பயிரிடுவது ஈரோடு சம்பா எனப்படும் நாட்டு ரக மஞ்சள் தான். மஞ்சள் கிழங்கைப் பொறுத்தவரை ஏக்கருக்கு 800 கிலோ விதைக்காக தேவைப்படும். பயிர் இடைவெளி 15 செ.மீ., வரிசை இடைவெளி 45 செ.மீ., வீதம் விதைக்க வேண்டும். ஜூன், ஜூலையில் விதைத்தால் 10 மாதம் கழித்து ஜனவரி முதல் மார்ச்சுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும்.
கிழங்கை வேகவைத்து பாலீஷ் செய்த பின் கணக்கிட்டால் ஒரு ஏக்கருக்கு 40 குவிண்டால் மஞ்சள் கிடைக்கும்.
கிழங்கை மொத்தமாக வாங்கி வைத்து தேவைக்கேற்ப பொடியாக 'பல்வரைசர்' இயந்திரத்தில் அரைக்கிறோம். பச்சை மஞ்சள் கிழங்குடன், மா இஞ்சி சேர்த்து மஞ்சள் ஊறுகாய் தயாரிக்கிறோம். மஞ்சளையும் பூசணியையும் சேர்த்து மஞ்சள் பூசணி அல்வா தயாரிக்கிறோம்.
கவுந்தம்பாடியிலும் ஈரோடு உழவர் சந்தையிலும் கடை அமைத்து எங்கள் நிறுவன பொருட்களை விற்பனை செய்கிறோம். மார்க்கெட் கமிட்டியில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து சிறுதானிய இயந்திரங்களை அமைத்து கம்பு, ராகி, திணையில் தயாரிக்கப்பட்ட ஈர இட்லி மாவை விற்பனை செய்கிறோம்.
120 மஞ்சள் விவசாயிகள், 500 தென்னை விவசாயிகள், மஞ்சள், தென்னை, பிற பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர்.
அடுத்ததாக தேங்காய்ப் பால் தயாரித்து அதை 'டெட்ரா பேக்கில்' அடைத்து உலகச்சந்தைக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். அதற்காக திட்ட அறிக்கையை எம்.எஸ்.எம்.இ., திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்ட தொழில் மையத்தில் சமர்ப்பித்துள்ளோம். திட்டம் தொடங்கப்பட்டால் உலகம் முழுவதும் எங்களது பொருளை சந்தைப்படுத்துவோம். இதில் கிடைக்கும் லாபம் விவசாயிகளுக்கு பங்கிடப் படுகிறது என்றார்.
இவரிடம் பேச: 90955 99109.
- எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை