
எள்ளு சாதம்!
தேவையானவை: அரிசி - 200 கிராம், கருப்பு எள் - நான்கு மேஜைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - நான்கு, உளுத்தம் பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி, பெருங்காயத்துாள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - இரண்டு மேஜைக்கரண்டி.
செய்முறை: அரிசியை களைந்து குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு, இரண்டு பங்கு தண்ணீர் விட்டு வைத்து, வேக வைத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் எள், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து கொள்ளவும். வறுத்த எள், உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
சாதத்தை அகலமான பாத்திரத்தில் போட்டு, பொடித்த எள், தேவையான அளவு உப்பு, பெருங்காயத்துாள் சேர்த்து எண்ணெய் விட்டு நன்றாக கலக்கவும்.
********
ப்ரூட்ஸ் கேசரி!
தேவையானவை: ரவை, சர்க்கரை - தலா ஒரு கப், நெய் - அரை கப், கேசரி கலர் பொடி - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய விருப்பமான பழத் துண்டுகள் - அரை கப், முந்திரி, திராட்சை - அலங்கரிக்க தேவையான அளவு.
செய்முறை: ஒரு தேக்கரண்டி நெய்விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை வறுத்து எடுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டு, கேசரி கலர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்த பின், ரவையை சேர்த்து கிளறவும். முக்கால் பங்கு வெந்த பின் சர்க்கரை, நெய் மற்றும் பழ வகைகளை சேர்த்து கிளறி இறக்கவும். முந்திரி, திராட்சை அலங்கரித்து பரிமாறவும்.
*******
சத்து மாவு புட்டு!
தேவையானவை: சத்துமாவு (நவதானியங்கள் வறுத்து அரைத்த மாவு) - ஒரு கப், தேங்காய் துருவல், சர்க்கரை - தலா ஒரு கப், ஏலக்காய்த்துாள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு தேக்கரண்டி, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் சத்து மாவை போட்டு, உப்பு, எண்ணெய் விட்டு பிசிறி, சிறிதளவு தண்ணீரை மாவின் மீது தெளித்து, பிசைந்து வைக்கவும்.
பிசைந்த மாவை இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இந்த மாவை கட்டிகள் இல்லாமல் கைகளால் உதிர் உதிராக உதிர்த்து, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்துாள் சேர்த்துக் கலந்தால், சத்தான புட்டு மாவு ரெடி.
குறிப்பு: இதை நவராத்திரி ஏழாம் நாள் செய்வது விசேஷம்.
******
ஸ்வீட் கார்ன் சுண்டல்!
தேவையானவை: ஸ்வீட் கார்ன் - ஒன்று, உப்பு, மிளகுத்துாள் - தேவையான அளவு.
செய்முறை: ஸ்வீட் கார்னை குக்கரில் வேகவிடவும். அதன் முத்துக்களை உதிர்த்து, அதனுடன் உப்பு, மிளகுத்துாள் சேர்த்து கலக்கி, சூடாக பரிமாறவும்.
மிகவும் ஆரோக்கியமான சுண்டல் இது.
*******
முளைகட்டிய நவதானிய சுண்டல்!
தேவையானவை: பச்சைப் பட்டாணி, முளைகட்டிய சோளம், சோயா - தலா ஒரு கப், கேரட் துருவல் - நான்கு தேக்கரண்டி, துருவிய மாங்காய் - இரண்டு தேக்கரண்டி, இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி, கொத்தமல்லி தழை - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோளம், பட்டாணி, சோயா எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து குக்கரில் வைத்து, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, தண்ணீரை வடிகட்டவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, இஞ்சி விழுது, மாங்காய் துருவல், கேரட் துருவல், வேக வைத்த சோளம், பட்டாணி மற்றும் சோயா சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலே துாவினால், முளைக்கட்டிய நவதானிய சுண்டல் தயார்.
*********
கிரிஸ்பி சுண்டல்!
தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், பொரித்த கார்ன்ப்ளேக்ஸ் - ஒரு கப், ஓமப்பொடி - 100 கிராம், காராபூந்தி - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப் பயறுடன் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பிறகு, தண்ணீர் வடித்து, பொரித்த கார்ன்ப்ளேக்ஸ், ஓமப்பொடி, காராபூந்தி சேர்த்துக் கலந்து சாப்பிட கொடுக்கவும்.
********