
ரஜினி படத்தை எதிர்பார்க்கும், எஸ்.ஜே.சூர்யா!
பல படங்களில் வில்லனாக மிரட்டி உள்ள இயக்குனர், எஸ்.ஜே.சூர்யா, தற்போது ரஜினியின், ஜெயிலர் 2 படத்தில் அவருக்கு வில்லனாகி இருக்கிறார். அதோடு, முந்தைய படங்களை விட இன்னும் மிரட்டலான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருப்பதாக கூறுகிறார்.
'ரஜினியுடன், ஜெயிலர் 2 படத்தில் நடித்திருப்பதால், இது எனக்கு ஒரு மைல்கல் படமாக அமையும். அதோடு, இந்த படத்தில் நான், ரஜினிக்கு எதிரியாக நடித்திருப்பதை பார்த்து, ரசிகர்கள் என்னை திட்டி தீர்த்தாலும், அதை கூட, இந்த கதாபாத்திரத்துக்கு கிடைத்த பாராட்டுகளாகவே எடுத்துக் கொள்வேன்...' என்கிறார், எஸ்.ஜே.சூர்யா.
சினிமா பொன்னையா
எதிர்பார்ப்பில் இருக்கும், நயன்தாரா!
நயன்தாரா நடித்த அரை டஜன் படங்கள், அடுத்தடுத்து தோல்வி அடைந்து விட்டன. தற்போது அவர், மூக்குத்தி அம்மன் 2 படத்தை தான், மலை போல் நம்பிக் கொண்டிருக்கிறார். இதனால், அப்பட இயக்குனர், சுந்தர்.சி சொல்லும், 'ரிஸ்க்' ஆன காட்சிகளிலும் தயங்காமல் நடித்து வருகிறார்.
அம்மன் வேடமிட்டு நடனமாடும் காட்சிகளில் நடிப்பதற்கு முன், பலமுறை, 'ரிகர்சல்' பார்ப்பதோடு, பக்தி பரவசத்துடன் அந்த காட்சிகளில் நடித்து, காண்போரை மெய்சிலிர்க்க வைத்து வருகிறார், நயன்தாரா.
— எலீசா
நித்யா மேனன் போடும், 'கண்டிஷன்!'
தனுஷுடன், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து, தேசிய விருது பெற்ற, நடிகை நித்யா மேனன், 'இந்த, 'இமேஜை' காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, 'வெயிட்'டான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்.
'முன்னணி, 'ஹீரோ'களின் படங்களாக இருந்தாலும் கூட, என் நடிப்பை அழுத்தமாக பதிவு செய்யக் கூடிய, நான்கு காட்சிகளாவது இருக்க வேண்டும். 'டம்மி' ஆன, 'ஹீரோயின்' வேடங்களுக்கு என்னை தேடி வராதீர்கள்...' என, நிபந்தனை போட்டு உள்ளார், நித்யா மேனன்.
— எலீசா
சிவகார்த்திகேயனின் திட்டம்!
சிவகார்த்திகேயன் நடித்து வரும், பராசக்தி படத்தில், ரவி மோகன் வில்லனாக நடிக்கும் நிலையில் தற்போது, பாகுபலி பட வில்லன், ராணாவையும் முக்கிய வேடத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர்.
அதேபோல் தெலுங்கு நடிகை, ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், பாசில் ஜோசப் என்ற மலையாள நடிகரும் நடித்துள்ளார். அதனால், இப்படத்தை எப்படியேனும் இந்திய அளவில் வெற்றி படமாக்கி விட வேண்டும் என, இயக்குனர், சுதாவிடம் கேட்டு வருகிறார், சிவகார்த்திகேயன்.
சினிமா பொன்னையா
தற்காப்பு கலை பயிற்சியில், மாளவிகா மோகனன்!
தங்கலான் படத்திற்காக சிலம்பம் கற்றுக் கொண்ட, மாளவிகா மோகனன், அந்த படத்தில் நடித்து, பாராட்டுக்கலைப் பெற்றார்.
தற்போது, மோகன்லால் மற்றும் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருபவர், ஒரு புதிய படத்தில் இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார். அதற்காக சிலம்பம், களரியை தொடர்ந்து, இன்னும் சில தற்காப்பு கலைகளிலும் பயிற்சி எடுத்து வருகிறார், மாளவிகா மோகனன்.
எலீசா
கருப்புப் பூனை!
வம்பு நடிகர் நடித்தாலே அந்த படம், 'பிளாப்' ஆகிவிடும் என்பது, சில தயாரிப்பாளர்களின் எண்ணமாக உள்ளது. அதனால், வெற்றிகரமான அந்த இயக்குனர் இயக்கத்தில், வம்பு நடிகர் நடிக்கப் போகும் படத்தை, முதலில் தயாரிப்பதாக சொன்ன, இரண்டு எழுத்து தயாரிப்பாளர் கடைசி நேரத்தில் விலகிவிட்டார்.
இதனால், சரியான தயாரிப்பாளர் கிடைக்காமல், தன் சொந்த பேனரிலேயே வம்பு நடிகரை நடிக்க வைக்க தயாராகி விட்ட, வெற்றிகரமான அந்த இயக்குனர், 'ஒருவேளை படம் குடை சாய்ந்து விட்டால், நஷ்டத்தில் தோள் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் சம்பளத்தில் தான் கை வைப்பேன்...' என, நடிகரிடத்தில், 'அக்ரிமென்ட்' போட்டு உள்ளார்.
சினி துளிகள்!
* தக்லைப் படத்தை அடுத்து, வெற்றிமாறன் இயக்கும், வட சென்னை கேங்ஸ்டர் படத்தில் நடிப்பதற்கு தன், 'கெட் -அப்'பை மாற்றி வருகிறார், சிம்பு.
* ஜெயிலர் படத்தில், ரஜினியின் மருமகளாக நடித்த, மிர்னா மேனன், அசோக்செல்வனுக்கு ஜோடியாக, 18 மைல்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!