/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஞானானந்தம்: பூரி கோவிலின் விக்கிரகம்!
/
ஞானானந்தம்: பூரி கோவிலின் விக்கிரகம்!
PUBLISHED ON : செப் 21, 2025

ஜகந்நாதப் பெருமாளுக்காக ஒரு கோவிலை கட்டினான், கலிங்க நாட்டு மன்னன். அதில், அழகான ஜகந்நாதரின் சிற்பத்தை நிறுவ நினைத்தான். அதற்காக நாடு முழுதும் கீழ்க்கண்ட பிரகடனத்தைப் பறைசாற்றினான்...
'மன்னரின் விருப்பத்திற்கேற்ப விக்கிரகத்தை உருவாக்கும் சிற்பிக்கு, 10 ஆயிரம் பொற்காசுகள் வெகுமதியாக அளிக்கப்படும்.மன்னரை மகிழ்விக்காத விக்கிரகம் கொண்டு வருபவரின் தலைத் துண்டிக்கப்படும்!'
இந்த நிபந்தனையால் யாரும் விக்கிரகம் செய்ய முற்படவில்லை.
எனினும், முதியவரான சிற்பி ஒருவர், 'மன்னரே, ஒரு நிபந்தனையை நீங்கள் ஏற்றால், நான் அந்த சிற்பத்தை உருவாக்குவேன்...' என்றார்.
'என்ன நிபந்தனை?' என்றார், மன்னர்.
'மன்னரே! விக்கிரகம், 30 நாட்களுக்குள் உருவாகி விடும். நான் சிற்பம் செதுக்கும் நாட்களில் கோவிலை மூடிவிட வேண்டும். எந்நிலையிலும், மன்னர் உட்பட யாரும் கோவில் கதவை திறக்க கூடாது...' என்றார், சிற்பி.
நிபந்தனையை ஏற்றார், மன்னர்; பணியைத் துவங்கினார், சிற்பி.
ஒருநாள், 'மன்னரே, முதியவர் மட்டுமே கோவிலுக்குள் உள்ளார். ஆனால், ஆயிரக்கணக்கானோர் வேலையில் ஈடுபடுவதை போன்ற சத்தம் கேட்கிறது. அவர் சிற்பத்தை செதுக்குகிறாரா அல்லது கோவிலை இடித்து தள்ளுகிறாரா என்ற ஐயம் உண்டாகிறது...' என்றார், அமைச்சர்.
'முப்பது நாட்கள் வரை காத்திருப்போம். நான் அளித்த வாக்கை காப்பாற்றுவது என் கடமை...' என்றார், மன்னர்.
இருப்பினும், அங்கு வந்து அந்த பயங்கர ஓசையைக் கேட்டார், மன்னர். அவரால் பொறுக்க முடியவில்லை.
அடுத்த நாள் கதவைத் திறக்க ஆணையிட்டார். மன்னரும் மற்ற அதிகாரிகளும் கோவிலுக்குள் சென்றனர். எந்தவித சேதமும் கோவிலுக்குள் காணப்படவில்லை.
அதிர்ச்சியுற்றார், மன்னர்.
சிற்பி செதுக்கி வந்த விக்கிரகம் மிகவும் அருவருப்பாக இருந்தது.
கோபத்துடன், 'நீ செதுக்கி வந்த அழகான சிற்பம் இதுதானா?' எனக் கேட்டார், மன்னர்.
'மன்னரே! 30 நாட்கள் வரை கதவை திறக்க கூடாது என, நான் சொன்ன நிபந்தனையை ஏற்ற நீங்கள், உங்கள் வாக்கை காப்பாற்றவில்லை. மேலும் சில நாட்கள் நீங்கள் பொறுத்திருந்தால், அழகான விக்கிரகம் உருவாகி இருக்கும்...' என, பதிலளித்தார், சிற்பி.
'மிக பயங்கரமான ஓசை கோவிலுக்குள் இருந்து வந்ததால் திறக்க வேண்டி வந்தது...' என்றார், மன்னர்.
'கடவுள் அழகானவற்றிலும், அருவருப்பானவற்றிலும், அனைத்து வடிவங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார் என, உங்களுக்கு உணர்த்தவே, இந்த அருவருப்பான விக்கிரகத்தை உருவாக்கினேன்.
'அழகான மற்றொரு விக்கிரகத்தோடு இதுவும் இங்கு இருக்கட்டும்...' என்ற சிற்பி, தன் உண்மை நிலையை வெளிப்படுத்தினார். ஜகந்நாதரே எதிரில் காட்சியளித்தார். அவர் அழகான விக்கிரகமாக உருமாறி, கோவிலில் தங்கி விட்டார்.
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியாகிய இறைவன், உலகிலுள்ள அனைத்திலும் குடிகொண்டுள்ளார் என்பதே உண்மை!
அருண் ராமதாசன்