
ராமநாதபுரம், பரிசுத்த அந்திரேயா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 7ம் வகுப்பு படித்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் இலக்கிய மன்ற கூட்டம் பள்ளி வளாகத்தில் நடக்கும். அதில் மாணவர்கள் பங்கேற்கும் பேச்சு, கதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
நன்றாக படிக்கும் எனக்கு அன்றைய கூட்டத்தில் பேச அழைப்பு வந்தது. கூச்ச சுபாவத்தால் மேடை ஏற பயந்து மறுத்த போது, 'உன்னால் முடியும். முயற்சி செய்... நீ தான் பேச வேண்டும்...' என நம்பிக்கை ஊட்டினார் வகுப்பு ஆசிரியை டாரத்தி. மறுக்க முடியாமல் அரைமனத்துடன் ஒப்பு கொண்டேன்.
மேடை ஏறும் ஐந்து நிமிடங்களுக்கு முன், தலைப்பு கொடுத்தனர். எனக்கு வித்தியாசமாக, 'காக்கைகளின் அட்டூழியம்' என்ற தலைப்பு வந்தது.
என் முறை வந்ததும் தைரியமாக மேடை ஏறினேன். குழந்தை கையில் திண்பண்டத்தை பறித்து செல்லும் காக்கை, வீட்டில் காய வைக்கும் வடகத்தை உண்ண வரும் காக்கையால் திணறல் என அன்றாட காட்சிகளை எளிமையாக காட்டினேன். கூட்டம் நடந்த கட்டடம் அருகே வேப்ப மரத்தில் கரைந்த காக்கைகளை சுட்டிக்காட்டி , 'பாருங்க... இப்பக்கூட என்னை பேச விடாமல் கத்தி தொந்தரவு செய்கின்றன...' என்றேன். கைதட்டலால் அதிர்ந்தது அரங்கம். பின்நாளில் கம்பன் கழக பட்டிமன்றகளில் பேசும் அளவிற்கு அது உயர்த்தியது.
என் வயது 77; ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணிக்காலத்தில் மாணவர்களை உற்சாகப்படுத்தி மேடையில் பேச ஊக்குவித்துள்ளேன். இதற்கு அடித்தளம் அமைத்த ஆசிரியை டாரத்தியை நன்றியுடன் நினைவில் பதித்துள்ளேன்.
- மீனா பாஸ்கரன், ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 70104 66502