
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மொடையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 2010ல் 10ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
படிப்பில் மிகவும் பின் தங்கியிருந்த போதும், எந்த வகுப்பையும் தவறவிடமாட்டேன். ஒவ்வொரு வகுப்பிலும் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல், தலையில் 'குட்டு' வாங்கி தண்டனை பெறுவதில் முதலிடம் பிடித்திருந்தேன்.
சனிக்கிழமையன்று சிறப்பு வகுப்பு நடத்திய அறிவியல் ஆசிரியர் கலைச்செல்வன், கேள்விகள் கேட்டார். சிலர் மட்டுமே பதில் கூறினர். நான் உட்பட பலரும் கையை கட்டியபடி அமைதியாக நின்றோம். இதை கண்டு, 'சரி... சந்தேகமாவது கேளுங்க... பதில் சொல்றேன்...' என்றார். அதற்கும் அசையாமல் நின்றோம்.
உடனே அதே பாடத்தை மீண்டும் விளக்கினார். அப்போதும் புரியாமல் விழித்ததால் கோபத்துடன் வெளியேறி, மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்திருந்த சாப்பாடு பையை எடுத்து வந்தார். அதை எங்கள் முன் வைத்து, 'பாடத்தை புரிய வைக்கும் வரை, நான் சாப்பிட போவதில்லை...' என மீண்டும் நடத்தினார். கல்லென நின்றதால், உணவை குப்பையில் கொட்டி திரும்பி, 'சரி... கவனமாக வீட்டுக்கு போங்க...' என்று கூறி வகுப்பை முடித்தார் ஆசிரியர்.
அடுத்து திங்களன்று வகுப்பறை வந்தவுடன் கேள்விகள் எழுப்பினார். மளமளவென பதில் தந்தோம். அப்போது அவர் முகத்தில் மலர்ந்த சிரிப்பு கண்டு மகிழ்ந்தோம்.
இப்போது என் வயது, 29; தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறேன். வகுப்பறையில் உணவை துறந்து கற்பிப்பதில் அக்கறை காட்டிய ஆசிரியர் கலைச்செல்வனை உள்ளத்தில் வரைந்து வணங்குகிறேன்.
- க.பிரசாந்த், விழுப்புரம்.
தொடர்புக்கு: 96003 17177