
திருநெல்வேலி, மீனாட்சிபுரம் முனிசிபல் நடுநிலைப் பள்ளியில், 1961ல், 8ம் வகுப்பு படித்தபோது தமிழாசிரியராக இருந்தார் வித்துவான் வ.சுப்பையா பிள்ளை. அவர் பாடம் நடத்துவது தனித்துவமாக இருக்கும். தமிழ் செய்யுட்களை ஒரு போதும் சொற்களை கூட்டி வாசிக்க மாட்டார். மாறாக, கணீர் குரலில் கம்பீரமாக பாடுவார். அதை ரசித்து கேட்போம்.
அன்றைய வகுப்பில், 'வெள்ளத்தடங்காச் சினை வாளை வேலிக் கமுகின் மீதேறித் துள்ளி முகிலைக் கிழித்து...' என துவங்கும் செய்யுளை நயமுடன் பாடினார். அது ஆர்வத்தை துாண்டி தமிழ் மொழி மீது பற்றுதல் ஏற்பட வழி வகுத்தது. அவரது பாணியை இறுகப் பற்றிக் கொண்டேன்.
அதன் விளைவாக, கல்லுாரி நாட்களில் சந்தம் நிறைந்த கவிதைகள் எழுதினேன். அவை, கல்லுாரி ஆண்டுமலரில் பிரசுரமாயின. நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களிலும் கவிதை நயங்களை பயன்படுத்துகிறேன். பழந்தமிழ் இலக்கியங்கள் வாசிப்பதை தொடர்கிறேன்.
எனக்கு 77 வயதாகிறது. ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். வகுப்பறையில் சந்தம் சிந்த பாடிய ஆசிரியர் வித்துவான் வ.சுப்பையா பிள்ளையின் குரல் என் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. மொழி மீது அளவற்ற ஆர்வம் ஏற்படுத்தியவருக்கு ஆத்மார்த்தமாக நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
- டி.ஜெயராஜ், சென்னை. தொடர்புக்கு: 73583 12583