உள்ளூர் செய்திகள்

சர்தார் 2

இயக்கம் : பி.எஸ்.மித்ரன்
நடிப்பு : கார்த்தி, எஸ் ஜே.சூர்யா, மாளவிகாமோகனன், யோகிபாபு, ஆஷிகா ரங்கநாத்
ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்
இசை : சாம்.சி.எஸ்
வெளியான தேதி : செப்., 10, 2026
நேரம் : 2 மணிநேரம் 59 நிமிடம்
ரேட்டிங் : 2.25 / 5

ராவில் பணியாற்றிய அப்பா சர்தார் கார்த்தியும், இப்போது பணியாற்றும் மகன் கார்த்தியும் இணைந்து டோக்குவை அழிக்க நினைக்கிறார்கள். டோக்குவை கைப்பற்றி, அதை ஆக்டிவேட் செய்து, அதை வைத்து ஆயிரக்கணக்கான மக்களை அழிக்க நினைக்கிறார் வில்லன் எஸ்.ஜே.சூர்யா. யார் ஜெயிக்கிறார்கள். இதுதான் சர்தார் 2 கதை. சரி, டோக்கு என்பது ஆளா? அது ஒரு கருவியா? அது, மிஷனா? வேறு ஏதாவதா என்பது சஸ்பென்ஸ்.

2022ம் ஆண்டு வெளியான சர்தார் படத்தின் கதைக்கு கொஞ்சம் முந்தைய கதை, அந்த கதைக்கு கொஞ்சம் பிந்தைய கதை கலந்த கலவை சர்தார் 2. முதற்பாகம் மாதிரியே இந்த பாகத்திலும் அப்பாவும், மகனும் சேர்ந்து தேசிய சிந்தனையுடன் நாட்டையும், மக்களையும் வில்லனிடம் இருந்து காப்பாற்றுகிறார்கள். இந்த பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன். முதல் பாக தொடர்ச்சி ஆங்காங்கே வருகிறது. மற்றபடி, இது முற்றிலும் வேறு கதை

1981ம் ஆண்டு ஒரு ஜப்பானிய ஆபத்தான மிஷின் மூலமாக பேரரழிவு ஏற்பட இருப்பதை, சர்தார் கார்த்தியும், ரா அதிகாரி மாளவிகா மோகனன், அவர் டீமும் வெற்றிகரமாக தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த மிஷின் ரகசியத்தை 3 சாவிகளை வைக்கிறார்கள், இப்போது வில்லன் எஸ்.ஜே.சூர்யா அந்த 3 சாவிகளை கைப்பற்றி, அந்த மிஷினை கைப்பற்றி மீண்டும் பேரரழிவு ஏற்படுத்த நினைக்கும்போது மகன் கார்த்தி, ஆஷிமாவுடன் இணைந்து அதை தடுக்க நினைக்கிறார். அந்த திட்டத்தில் ஒரு கட்டத்தில் அப்பா சர்தார் கார்த்தியும் இணைய என்ன நடக்கிறது என்ற ரீதியில் திரைக்கதை விரிகிறது.

இளமையான ரா ஏஜென்ட் கார்த்தியை விட, அப்பாவாக நடித்த வயதான சர்தார் கார்த்திக்கு நிறைய இடங்களில் நடிக்க வாய்ப்பு. அவர் வசனங்கள் பவர்புல். சண்டைக்காட்சிகளில் இரண்டுபேரும் இணைந்து கலக்குகிறார்கள். என்ன, இரண்டுபேருக்கும் சரியான பாடல், கலர்புல் சீன்கள் இல்லை. இத்தனைக்கு இது சாம்.சி.எஸ் இசையமைக்கும் 100வது படம். அந்த வகையில் ஏமாற்றம், முழுக்க, முழுக்க சண்டைக்காட்சிகளை நம்பி எடுக்கப்பட்ட ரா ஏஜென்ட்டுகளில் கதை என்பதால், கொஞ்சம் எமோஷன் இருக்கிறது. மற்ற கமர்ஷியல் விஷயங்கள் குறைவு, அப்பா, மகன் பாசம் ஓகே.

ஹீரோயின் என யாரும் இல்லை. மகன் கார்த்தியுடன் இணைந்து பல விஷயங்களை கண்டுபிடிக்கிறார் ஆஷிகா. பிளாஷ்பேக் காட்சியில் அப்பா சர்தாருடன் இணைந்து பல அதிரடி விஷயங்களை செய்கிறார் மாளவிகா மோகனன். கிராமத்து காட்சியில் ஒன்றிரண்டு இடங்களில் வந்து செல்கிறார் ரஜிஷா விஜயன். மாளவிகாவுக்கு மட்டுமே ஓரளவு உருப்படியான காட்சிகள்.

வில்லனாக வந்து அசத்தியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவரின் கேரக்டர் பின்னணி, பிளாஷ்பேக் உண்மை, அவரின் கோபம், ஆக் ஷன் அசத்தல், என்ன மனிதர் பக்கம், பக்கமாக வசனம் பேசுகிறார். காது வலிக்கும் அளவுக்கு நிறைய விஷயங்களை சொல்கிறார். அந்த நேரத்தில் வெளியே போய் காபி குடித்துவிட்டு வந்தால் கூட, அவர் பேசிக்கொண்டே இருக்கிறார். அவர் மூலமாக மருத்துவத் துறையில் ஒரு நல்ல விஷயத்தை இயக்குனர் சொல்கிறார். ஆனால், அவரின் ஓவர் டோஸ் வசனங்கள், ஓவர் ஆக்டிங்கால் அது வீணாகிறது.

நாசர், ஆசிஷ் வித்யார்த்தி, நிழல்கள் ரவி, சின்னி ஜெயந்த், பாலாஜி சக்திவேல் என ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும் யாரும் மனதில் நிற்கவில்லை. அவ்வப்போது வந்து சில சீன்களில் நடித்துவிட்டு, வேறுபடத்துக்கு யோகிபாபு போய்விட்டார் போல, அவர் சீன், கேரக்டரில் கன்டினியுட்டி இல்லை, அவர் சிரிப்பையும் வரவழைக்கவில்லை. ரா ஆபீஸ், ரா அதிகாரிகளை சீரியஸ் ஆக, கம்பீராக காண்பிக்காமல் இருப்பதும் படத்தின் வீரியத்தை குறைக்கிறது.

மைசூர் தசரா கொண்டாட்டத்தில் கிளைமாக்ஸ், ஜப்பானில் ஒரு ஆபரேஷன், விமானம் மற்றும் ஓடும் ரயிலில் சண்டைக்காட்சி, உருக்கமான பிளாஷ்பேக், ரா அலுவலகம், அதிரடி வில்லன் டீம் என நிறைய செலவழித்து படத்தை எடுத்து இருக்கிறார்கள். ஆனால், பல காட்சிகளில் உயிர், உணர்வு இல்லை. வசனங்களே நிரம்பி வழிகிறது. அப்பா, மகன், என இரண்டு வேடங்களில் கார்த்தி கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார். மற்ற மைனஸ்களால் அவர் உழைப்பு வீணாகிவிட்டது. டோக்கு, ஆபத்தான கிருமி, அதன் பாதிப்பு விஷயத்தை இன்னும் எளிமையாக சொல்லியிருக்கலாம். அதில் தனது புத்திசாலிதனத்தை காண்பித்து போராடிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.

ராணுவம், ஜப்பான், ஆய்வகம், ரயில் பைட், மைசூர் கிளைமாக்ஸ் போன்ற இடங்களில் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம் உழைப்பு தெரிகிறது. படத்தை இழு, இழுவென இழுத்து சரியாக எடிட்டிங் செய்யாமல் தவிக்க விட்டு இருக்கிறார் எடிட்டர் விஜய். ஆபத்தை விளைவிக்கும் ஒரு விஷயத்தை எப்படி அழிக்கிறார்கள் என்ற வழக்கமான கதைதான். அதற்கு டோக்கு, பயோவார், ஆன்டிபயாடிக், ஜீன், மருந்து மாத்திரை என பல விஷயங்களை கலந்து கொடுத்து, குழப்பியிருக்கிறார் இயக்குனர். ஓவர் டோஸ் மாத்திரை வேணாம். ஆன்டிபயோடிக் அதிகம் வேணாம். சில மருந்துகள் ஆபத்து என இன்றைக்கு நாட்டுக்கு தேவையான விஷயத்தை சிம்பிளாக சொல்லியிருந்தால் சர்தார் 2-வை பாராட்டியிருக்கலாம். ஆனால், நீளமான கதை, ஏகப்பட்ட குழப்பமான சீன்கள், அளவுக்கு அதிகமான வசனங்கள், புரியாத பல விஷயங்களால் சர்தார் 2-வை ரசிக்க முடியவி்ல்லை. அவர் சொல்ல வந்த விஷயமும் மக்களிடம் சரியாக போய் சேரவில்லை. ரா ஏஜென்ட் கதை என்றாலும் ஆக் ஷனை தவிர, காமெடி, பாடல், விறுவிறுப்பு, சென்டிமென்ட் செட்டாகவில்லை. ஆன்டிபயாடிக் அதிகம் வேணாம் என்பதை சொல்லும் கதை, ஆனா, படம் முடிந்தபின் தலைவலி மாத்திரை தேவைப்படுகிறது

சர்தார் 2 - ஓவர் டோஸ்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !