மண்டாடி
தயாரிப்பு : ஆர்.எஸ். இன்போடெயின்ட்மென்ட்
இயக்கம் : மதிமாறன் புகழேந்தி
நடிப்பு : சூரி, சத்யராஜ், மகிமா, சுகாஸ், ரவீந்திரவிஜய்
ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.கதிர்
இசை : ஜி.வி.பிரகாஷ்
வெளியான தேதி : செப் 10 2026
நேரம் : 2 மணிநேரம் 34 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
ராமநாதபுர மாவட்டம் கடலோர கிராமம் ஒன்றில் கோவில் திருவிழாவை முன்னிட்டு காலங்காலமாக பாய் மர படகு போட்டி நடக்கிறது. அதில் சத்யராஜ் சிஷ்யர்களான சூரியும், சுகாசும் இரண்டு அணிகளாக கடுமையாக மோதிக் கொள்கிறார்கள். நண்பர்களாக இருந்த இவர்கள் பிரிந்தது ஏன்? ஊரைவிட்டு ஒதுங்கி 20 ஆண்டுகளாக சூரி சென்னையில் வாழ்ந்தது ஏன்? மீண்டும் ஊர் திரும்பியது ஏன்? அந்த பாய்மரபடகு போட்டியால் நடக்கும் சண்டைகள், உள்குத்துகள், பகை என்னென்ன? கடைசியில் யார் ஜெயித்தார்கள் என்பது மண்டாடி படக்கதை. மதிமாறன் புகழேந்தி இயக்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொட்டிராத புது சப்ஜெக்ட், அந்த பாய்மரபடகு போட்டி. கடலில் பாய் மரம் கட்டிய சிறு படகில் 6 பேர் ஒரு குறிப்பிட்ட எல்லையை சுற்றி வர வேண்டும். பாய் மரம் ஓட்டும் திறமை, காற்றின், கடலின் தன்மை அறிந்து, உடல் மனவலியால் ஜெயிக்கும் பாரம்பரிய விளையாட்டு. அதில் காதல், நட்பு, வீரம், தியாகம், பாசம் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் .
சென்னை பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல் குள, நீர் விளையாட்டு மேற்பார்வையாளராக இருக்கும் சூரி , 20 ஆண்டுக்குபின் ஆக்ரோசமாக சொந்த ஊர் திரும்புவதில் இருந்து கதை சூடு பிடிக்கிறது. அங்கே போட் செய்யும் கம்பெனி நடத்தும், ஊரின் தாதா, சூரியின் முன்னாள் நண்பனான சுகாசுடன் அவர் மோத தொடங்க இன்னும் விறுவிறுப்பு அடைகிறது.
தாடி வைத்த, ஒல்லியான நடுத்தர வயது தோற்றத்தில் வரும் சூரியின் கேரக்டர் அவ்வளவு அழுத்தமாக , அனல் பறக்க வடிவமைத்து இருக்கிறார் இயக்குனர். அதை உணர்ந்து சூரியும் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவரின் கோபம், பாய் மர போட்டி மீதான காதல், அதை தடுக்க வில்லன் டீம் வரும் ஏற்படும் மோதல் காட்சிகளில் கலக்கி இருக்கிறார்.
எந்த இடத்தில் அவரின் பழைய உடல் மொழி, காமெடி சற்றும் பிரதிபலிக்கவில்லை. குறிப்பாக ஆக் ஷன் காட்சிகளில் தூள் பறத்துகிறார். இடைவேளைபின் பிளாஷ்பேக் காட்சிகளில் இளமையாகவும் வருகிறார். நீண்ட கிளைமாக்ஸ் ஆக வரும் அந்த பாய் மர போட்டி மெய் சிலிர்க்க வைக்கிறது. நடுகடலில் பாய் மர படகுடன் தன் டீம் ஜெயிக்க போராடுவது. அப்போது உருவாகும், சிக்கல், தாக்குதல், இயற்கை சீற்றங்களை சமாளிப்பது. அதை புத்திசாலிதனமாக சமாளிப்பது ஆகிய இடங்களில் பின்னி எடுத்து இருக்கிறார். அவரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம். டப்பிங், சில எமோஷன் சீன் களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
வில்லனாக வரும் சுகாஸ் யாருப்பா இது என கேட்க வைக்கிறார். பல இடங்களில் கோபத்தில், வேகத்தில் அவர் பேசுவது, சண்டை போடுவது செம. சரியான தேர்வு. இவர்களை தவிர, ஹீரோயினாக வரும் மகிமா நம்பியார் கொஞ்சம் வயதான தோற்றத்தில் நடிப்பில் முத்திரை பதித்து இருக்கிறார். அவர் சூரிய காதலிக்கிறார். ஆனால் சூரிக்கு ஜோடி இல்லை என திரைக்கதையிலும் வித்தியாசம். அவர் கோப சீன், திருவிழாவில் ஆடும் சீன், மகனிடம் தன் காதலை பேசும் சீன் பிரமாதம்.
பாய் மரப்போட்டி ஜாம்பவானாக சத்யராஜ் வருகிறார். அவர் கெட் அப்பில் வித்தியாசம். ஆனால் நடிப்பில் புதுமை இல்லை. அவர் பாய் மரம் செலுத்தும் சீன் கூட அதிகம் இல்லை. இவர்களை தவிர சூரி நண்பனாக வரும் பால சரவணன், வில்லன் அப்பா, முக்கியமான கேரக்டரில் வர ரவீந்திர விஜய் மனதில் நிற்கிறார்கள். ஊர்த்தலைவர் ஸ்டண் சிவா, ஊர்க்காரர்கள், பாய்மர போட்டியில் பங்கேற்கும் இளைஞர்கள் என எல்லாரையும் நன் கு வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர். இன்னொரு காதலும் கியூட் ஆக இருக்கிறது
சூரி ஹீரோ என்றால் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிரும், பைட் மாஸ்டர் பீட்டர் ஹெயினும் மற்ற ஹீரோக்கள். பாய் மர போட்டி, கடல், சண்டை காட்சிகளில் இவர்கள் கடும் உழைப்பு தெரிகிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் . பாடல்கள் ஓகே. போட்டிகளுக்கு ஒரு தனித்தன்மை அல்லது கடல் சார்ந்த பின்னணி இசை கொடுத்து இருக்கலாம். அது மிஸ்சிங்.
போட்டி, நட்பு, காதல், துரோகம், பழிவாங்கல் ஆகியவற்றை சுற்றி கதை நடக்கிறது. இடைவேளைக்குபின் போரடிக்கிறது. கிளைமாக்சில் பிக் அப் ஆகி விடுகிறது. எப்படியும் சூரி டீம் ஜெயிக்க போகிறார்கள் என்ற டோன் முன்னமே வந்து விடுவது, அதற்கான பில்டப் மைனஸ்.
கடல் சார்ந்த கதைகளை, ஆக் ஷன், கிராமத்து கதைகளை விரும்புகிறவர்களுக்கு மண்டாடி பிடிக்கும். இளைஞர்களுக்கு பிடிக்கும் விஷயங்கள் குறைவு. ஓவர் எமோசன், துரோகம் பல படங்களில் பார்த்தது. சத்யராஜ் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் சீன், கோயில் திருவிழா சீன்களில் இன்னும் உழைத்து கமர்ஷியல் சேர்த்து இருக்கலாம். ஆனாலும் புது கதைக்களம், மிரட்டலான மேக்கிங், நடிகர்கள், ஒளிப்பதிவாளர், பைட் மாஸ்டர் உழைப்பு, அந்த பாய் மர போட்டிகளுக்காக மண்டாடியை ரசிக்கலாம்
மண்டாடி - பரபர பாய்மர போட்டியை நேரில் பார்த்த உணர்வு