ராம் அண்ட் லீலா
தயாரிப்பு : டிரைடன்ட் ஆர்ட்ஸ்
இயக்கம் : ராமசந்திரன் கண்ணன்
நடிப்பு : ரியோ, வர்த்திகா, மாகாபா ஆனந்த், தீபாவெங்கட், காத்தாடிராமமூர்த்தி, சேத்தன், மாளவிகாஅவினாஷ்
ஒளிப்பதிவு : மல்லிகார்ஜூன்
இசை : அங்கிட் மேனன்
வெளியான தேதி : ஆகஸ்ட் 21, 2026
நேரம் : 2 மணிநேரம் 23 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
ஒரு மின்சார ரயில் சந்திப்பில் இரவு நேரத்தில் நல்ல நண்பனை சந்திக்கிறார் ஹீரோ ரியோ. அதே ரயிலில் பகல் நேரத்தில் ஹீரோயின் வர்த்திகாவையும் சந்தித்து காதலிக்கிறார். ஹீரோயின் குடும்பத்துடன் நெருக்கமாகிறார். ''நான் ஆறுமணிக்கு மேல் வெளியே வரமாட்டேன் எவ்வளவு வற்புறுத்தினாலும் என்னை பார்க்க முடியாது' என்று ஹீரோயின் எஸ்கேப் ஆகிறார். சின்னதம்பி கவுண்டமணி பாணியில் மாலைக்கண் நோயா இருக்குமோ என ரியோ சந்தேகப்பட, கடைசியில் அந்த அதிர்ச்சி உண்மை தெரிகிறது. ஆம், ஹீரோயின், அவரின் உறவினர்கள் மனிதர்களே இல்லை. அவர்கள் ஏலியன்கள். அதிலும், ஆறு மணிக்கு மேல் ஆணாக மாறி விடுகிறார் ஹீரோயின். இரவில் ரியோவின் ஆண் நண்பனாக இருப்பவர் அந்த ஹீரோயின்தான். என்ன தலை சுற்றுகிறதா? ஆனாலும், பல சந்தேகங்கள், பேச்சுவார்த்தைகளுக்குபின் விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் ஹீரோயினை திருமணம் செய்ய சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறார் ரியோ, அங்கே ஒரு திருப்பம். ஆறு மணிக்கு மேல் ஆணாக இருக்கும் ஹீரோயினை(அந்த நண்பனை) ஹீரோ ரியா தங்கை காதலிக்க ஆரம்பிக்க, கடைசியில் கல்யாணம் நடந்ததா? யாருடன் நடந்தது என்பது ராம் அண்ட் லீலா கதை. ஹீரோ பெயர் ராம், ஹீரோயின் பெயர் லீலா. அதனால் இந்த தலைப்பு
கொஞ்சம் வித்தியாசமான கதை, பேன்டசி சப்ஜெக்ட். டபுள் ஆக்குபன்சி படம் தவிர, வேறு எந்த படத்திலும் வராத கதை. அந்த வகையில் இயக்குனரை பாராட்டலாம். ஆனாலும் ரொம்ப சிந்தித்துவிட்டரோ என தோன்றுகிறது. பல இடங்களில் ஓவர் டோஸ். காதலன், மாறுபட்ட கேரக்டர் உள்ள ஹீரோயினை காதலிக்கும் காதலன், பல பிரச்னைகளை எதிர்கொள்ளும் காதலன், பொறுப்பான அண்ணன் வேடத்தில் ஓரளவு நடித்து இருக்கிறார் ரியோ. தனது காதலியின் ஆண் வெர்ஷனை தங்கை காதலிப்பது பதறுவது, அவர்களை பிரிக்கிற இடங்களில் ரசிக்க வைக்கிறார். ஆனாலும் அவருக்கு இந்த கேரக்டர் செட்டாகவில்லை. பொதுவாக ரியோ நடிப்பை பெண்கள் ரசிப்பார்கள். இதில் குறைவு.
ஹீரோயினாக வரும் வர்த்திகா அழகாக இருக்கிறார். சில இடங்களில் நன்றாக நடித்து இருக்கிறார். ஆனாலும், பல இடங்களில் ஏமாற்றமான நடிப்பு, பொம்மை மாதிரி வந்து போகிறார். நீண்ட இடைவெளிக்குபின் ஹீரோயின் அம்மாவாக நடித்து இருக்கிறார் தீபா வெங்கட், அவர் போர்ஷன் அழகு. அவர் தம்பியாக வருகிற மாகாபா ஆனந்த் சின்ன, சின்ன டயலாக், அவர் பெண்ணாக மாறும் இடம் இடங்கள் கலகலப்பு. அந்த பெண் வெர்ஷனை , ஹீரோ ரியோ மாமா முனிஸ்காந்த் காதலிக்க, ஏதோதோ எடுத்து வைத்து இருக்கிறார் இயக்குனர். ஹீரோ அப்பாவாக சேத்தன், அம்மாவாக மாளவிகா அவிஷாஷ் வந்து போகிறார்கள். ஹீரோயின் ஆண் வெர்ஷனாக வரும் பாலாஜி சில இடங்களில் ரசிக்க வைக்கிறார்கள். நல்ல நாடக நடிகரான காத்தாடி ராமமூர்த்தியை வீணடித்து இருக்கிறார்கள். ஹீரோயின் தங்கையாக வரும் தாபியா அபு குறும்புதனங்கள் ஓகே.
ஏலியன், ஆணாக மாறுவது, பெண்ணாக மாறுவது ஆகியவை பேன்டசி என்றாலும், அதை ஜாலியாக சொல்லாமல், எளிமையான திரைக்கதையாக சொல்லாமல் குழப்பி, வேறு வகை திரை மொழியில் சொல்லி இருப்பது போராடிக்கிறது. அதுவே படத்தின் பெரிய மைனஸ் ஆகிவிடுகிறது. கதையே இப்படி என்பதால் பாடல்கள், ஒளிப்பதிவில் பெரிய பிளஸ் இல்லை. திருமணம், அதற்கு முந்தைய பாடல் இதெல்லாம் பல படங்களில் பார்த்து புளித்தது.
அதிலும் அந்த திருமண போர்ஷன், அதற்கு முந்தைய ஏற்பாடுகள், பல படங்களில் பார்த்தது. கிளைமாக்ஸ் இன்னும் அழுத்தமாக அல்லது எளிமையாக எடுத்து இருக்கலாம். தனது திறமையை காண்பித்து விளையாட படத்தை இழுத்திருக்கிறார் இயக்குனர். குஷ்பு மகள் தயாரிப்பில் டபுள் ஆக்குபன்சி என்ற படம் வந்ததும், அதை பார்த்தவர்கள் இந்த படம் பார்ப்பதும் படத்தின் வெற்றியை பின்னோக்கி இழுக்கும். பல வசனங்கள், சீன்கள் செயற்கைதனமாக, சினிமாதனமாக இருப்பதும், படத்தை முடிக்க முடியாமல் இழுப்பதும் சலிப்படைய வைக்கிறது.
ஹீரோ, ஹீரோயின் காதல், வீடு, உறவினர்கள் என வழக்கமான பாணியில் மெதுவாக கதை நகரும்போது, ஹீரோயின் ஒரு ஏலியன் என ஹீரோவுக்கு தெரிய வர, படம் யூடர்ன் போட்டு வேகமெடுக்க ஆரம்பிக்கிறது. அப்புறமும் பிரச்னை, காதல், சண்டை என வேகம் குறைகிறது. ஹீரோ, ஹீரோயின் திருமணத்துக்கு தென்காசிக்கு செல்ல அங்கே நடக்கும் விஷயங்களில் சுவாரஸ்யம் இல்லை. வேகமாக வளர்ந்துவரும் ரியோவுக்கு இந்த படம், கதை ஸ்பீடு பிரேக்கர். இந்த மாதிரியான எக்ஸ்பரிமண்ட் கதைக்கு, ராம் லீலா, ராம் இன் லீலா என தலைப்பு வைத்து, கடைசியில் சென்சார் பிரச்னையால் ராம் அண்ட் லீலா என மாற்றியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சப்ஜெக்ட்டுக்கு ராமரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன, இயக்குனர் ராமசந்திர கண்ணனே?
என்ன நோக்கமோ?
ராம் அண்ட் லீலா - ஆறு மணிக்குமேல் ஆணாக மாறும் ஹீரோயினை காதலிக்கும் ஹீரோவின் லீலை