உள்ளூர் செய்திகள்

ஜி.டி.என்

தயாரிப்பு : வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், டிரிகலர் பிலிம்ஸ்
இயக்கம் : கிருஷ்ணகுமார் ராமகுமார்
நடிப்பு : மாதவன், சத்யராஜ், ஜெயராம், ப்ரியாமணி, துஷாரா விஜயன், அதிதி பாலன், கருணாகரன்
ஒளிப்பதிவு : அரவிந்த் கமலாநாதன்
இசை : கோவிந்த் வசந்தா
வெளியான தேதி : ஆகஸ்ட் 7, 2026
நேரம் : 2 மணிநேரம் 27 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5

இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும், கோவை சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு வாழ்க்கைதான் ஜிடிஎன் படம். பிரிட்டிஷ் காலம் மற்றும் சுதந்திர இந்தியாவில் ஜி.டி.நாயுடு எப்படி இருந்தார். அவரின் ஆர்வம், முயற்சிகள், கண்டுபிடிப்புகள், போராட்டங்கள், அவமானங்கள், குடும்ப வாழ்க்கை என நமக்கு தெரியாத பல விஷயங்களை, நிறைய ஆராய்ச்சி செய்து படமாக கொடுத்து இருக்கிறார் கிருஷ்ணகுமார் ராமகுமார். ஜி.டி.நாயுடுவாக வருபவர் மாதவன்.

1914ம் ஆண்டு ஒரு வெள்ளைக்காரனிடம் இருந்து ஜி.டி.நாயுடு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்க ஆசைப்படுவது, அதற்காக ஓட்டலில் வேலை பார்ப்பது, பின்னர் மில் தொழிலாளி, மில் முதலாளி என கதை தொடங்குகிறது. சின்ன வயது ஜி.டி.நாயுடுவாக டிஜே அருணாசலம், அவர் மனைவியாக ஷீலா சிறப்பாக நடித்து இருக்கிறார். அடுத்தக்கட்டத்தில் இளைஞனாக, நடுத்தர வயதுடையவராக, முதுமையில் இருப்பவராக 3 மாறுபட்ட கெட்அப்பில் ஜி.டி.நாயுடுவாகவே வாழ்ந்து இருக்கிறார் மாதவன் என்று சொல்லலாம்.

பஸ் கம்பெனிகளை ஒருங்கிணைக்கும் அவர் யுக்தி, பிரிஷ்டிஷ் அதிகாரிகள், வருமானவரித்துறை அதிகாரிகளுடன் மோதல், அதனால் சொத்துகளை, வியாபாரத்தை இழப்பது, மீண்டும் போராடி ஜெயிப்பது என பல இடங்களில் அவர் நடிப்பு பிரமாதம். எந்த இடத்திலும் அவரின் வழக்கமான சாக்லெட் லுக், நடிப்பு வரவே இல்லை. பல இடங்களில் கம்பீராக இருக்கிறார். முதுமையான தோற்றத்தில் இன்னும் சிறப்பாக நடித்து இருக்கிறார். அதிகாரிகள் டார்ச்சரால் விரக்தியில் அவர் செய்யும் செயல்கள், மனைவியுடன் பிரச்னை, அடுத்த நடக்கும் திருப்பங்கள் என படத்தை தோளில் தாங்கியிருக்கிறார். தமிழகத்தில் வாழ்ந்த, சாதனைகள் படைத்த விஞ்ஞானியை வாழ்க்கையை, உலகம் அறிந்து கொள்ள அவர் எடுத்த முயற்சிகளை பாராட்டலாம். அவரே பார்ட்னராக படத்தை தயாரித்து, வசனங்களையும் இணைந்து எழுதியிருக்கிறார். அரவிந்த் ஒளிப்பதிவு அந்த காலத்துக்கு சென்ற வந்த உணர்வை தருகிறது. கலை இயக்கமும் கவனிக்கப்படுகிறது.

சின்ன வயது ஜி.டி.நாயுடு மனைவியாக ஷீலாவும், அவரின் நடுத்தர வயது தோற்றத்தில் ப்ரியாமணி, ஜி.டி.நாயுடு 2வது மனைவியாக துஷாரா விஜயனும் வருகிறார்கள். இவர்களுக்கு கொஞ்ச காட்சிகள் என்றாலும் தங்களுக்கு வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

ஜி.டி.நாயுடு நண்பராக, அவர் கம்பெனியில் விசுவாசியாக வேலை செய்கிற கேரக்டர் சத்யராஜிற்கு. அந்த கெட்அப், அவரின் விசுவாச காட்சிகள் பிரமாதம். அதேபோல், ஜி.டி.நாயுடுக்கு குடைச்சல் கொடுக்கிற வருமான வரித்துறை அதிகாரியாக வரும் ஜெயராம் கேரக்டர், அவர் நடிப்பு படத்துக்கு பெரிய பிளஸ். பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த கருணாகரன் இதில் கொஞ்சம் வில்லனம் காண்பித்து, ஜி.டி.நாயுடுவை வீழ்த்த நினைக்கிறார். அவர் நடிப்பும் அருமை.

இவர்களை தவிர, ஜி.டி.நாயுடு மாமனாராக தம்பி ராமையா, ஜி.டி.நாயுடு யார் என்ற கதையை விவரிக்கும் அரசு அதிகாரியாக வரும் அதிதி பாலனும் மனதில் நிற்கிறார்கள். வினய்க்கு வில்லங்கமான வில்லன் வேடம். இன்னும் அதை சிறப்பாக செய்து இருக்கலாம். வெள்ளைக்கார மோசமான அதிகாரி, நல்ல குணம் கொண்ட வெள்ளைக்காரராக வருபவர்கள் நடிப்பும் ஓகே. விஜய் ஜேசுதாசுக்கு ஈ.வே.ராமசாமி கேரக்டர் அவ்வளவாக செட் ஆகவில்லை. இவர்களை தவிர எம்.ஆர்.ராதாவாக ஜான் விஜய், என்.எஸ்.கிருஷ்ணனாக இயக்குனர் கிருஷ்ணகுமாரும் கொஞ்சம் வந்து அசத்துகிறரா்கள். இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட கேரக்டர்கள். அனைவருக்கும் நடிக்க இடம் கொடுத்து இருக்கிறார் ஹீரோ மாதவன்.

முதற்பாதி கதை முழுக்க ஜிடி நாயுடுவின் பின்னணி, வளர்ச்சியை பேசுகிறது, பிற்பாதி அவர் சந்திந்த பிரச்னைகள், குடும்ப வாழ்க்கை சிக்கல்களை சொல்கிறது. இப்படியெல்லாம் இருந்தாரா ஜி.டி.நாயுடு. அவர் குடும்பம், நிறுவனம் இவ்வளவு சிக்கல்களை சந்தித்தா? வெள்ளைக்கார அரசு, சுதந்திர இந்திய அரசு இப்படி தொந்தரவு கொடுத்தார்களா என்பது பலருக்கும் புது தகவலாக இருக்கும். குறிப்பாக, கிளைமாக்சுக்கு முந்தைய அவரின் டைவர்ஸ் காட்சிகள் பலருக்கும் தெரியாத திருப்பங்கள் கொண்ட புது விஷயங்கள். அந்த வயதான கெட் அப்பில் மாதவன் நடிப்பும் நச்.

என்ன, ஒரு விஞ்ஞானியின் வளர்ச்சி, அவருக்கு அதிகாரிகள் கொடுத்த தடைகள், அதை வென்றதை பெரும்பாலான விஷயங்கள் பேசுகிறது. அவரின் கண்டுபிடிப்புகளில் ரேசர் தவிர மற்றதை விரிவாக சொல்லவில்லை. பல கண்டுபிடிப்புகளை சில வேகமாக கடந்து செல்வது ஏமாற்றமாக இருக்கிறது. வருமான வரி விவகாரம், அதற்காக நடக்கும் சண்டைகள் ஓவர் டோஸ். அதை குறைத்து அவரின் கண்டுபிடிப்புகள், அதை உருவாக்கிய விதம் குறித்து இன்னும் பேசியிருக்கலாம். விஞ்ஞானி வாழ்க்கையில் அவர் சொந்த வாழ்க்கையை அதிக பேசிவிட்டு, அவர் கண்டுபிடிப்புகளை குறைத்தது நிறைவாக இல்லை.

ஜெர்மன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அழுத்தம் இல்லை. அரசுக்கும், அவருக்கும் முட்டல், மோதல், வரி கட்டும் பிரச்னை, வரியால் ஏற்படும் தொல்லை என அதற்கே நிறைய நேரம் செலவழித்து இருக்கிறார். இதெல்லாம் குழந்தைகள், இளைஞர்கள் ரசிக்க வாய்ப்பு குறைவு. இதனால் அவரின் சாதனைகள், படைப்புகளை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடியவில்லை. எது எப்படியோ ஜி.டி.நாயுடு என்ற நமக்கு கொஞ்சம் தெரிந்த பலருக்கும் தெரியாத விஞ்ஞானியை, பல புது தகவல்களுடன் சினிமாவாக பதிவு செய்த இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார், நடிகர் மாதவன் மற்றும் படக்குழுவை பாராட்டலாம். ஜிடிஎன் வாழ்க்கை ஏன் பாடப் புத்தகத்தில் இடம் பெறலை என்ற கேள்வி நமக்கும் எழுகிறது.

ஜிடிஎன் - ஒரு விஞ்ஞானியின் சாதனைகளும், போராட்டங்களும்...!



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (4)

S Bala, London
2026-08-08 10:20:19

அவர் கண்டுபிடித்ததாக சொல்லப்படும் எதுவும் உபயோகத்தில் இருந்ததில்லை.


S Bala, London
2026-08-08 08:39:43

ஜி.டி.நாயுடு ஒரு விஞ்ஞானி என்பதை விட ஏமாற்றுக்காரன் என்பதே சரியாக இருக்கும். அவர் கண்டுபிடித்த எதுவுமே என்றும் நடைமுறையில் இருக்கவில்லை. 400 ரூபாய் ஊசி போட்டு 40 ரூபாய் வாழைத்தார் விளையவைத்தவர. ஒரு முறை கூட ஷேவ் செய்ய முடியாத டெய்லி ஷேவ் என்ற பிளேடு செய்தவர், வரி காட்டாமலிருப்பது எப்படி என்று புத்தகம் எழுதியவர், உணவக கூலியாக இருந்து கோவையில் மிகப்பெரும் பணக்காரர் ஆனவர், எப்படி ஆங்கிலேயர் துணையின்றி வளர்ந்தார் என்று சொல்லி இருக்கலாம்.


நிக்கோல்தாம்சன், chikkanayakanahalli tumkur dt and Bangalore
2026-08-08 07:41:36

வெள்ளைக்காரர்களை நல்லவர்களாக காட்டுவதற்கு எவ்வளவு பணம் வாங்கினீர்கள் ???


RAJ, dammam
2026-08-08 06:07:00

தமிழ்நாட்டின் பொக்கிஷமாக வாழ்ந்து . பெருமை சேர்த்து . மறைந்த மகானின் வரலாற்றை .. தமிழ்நாடு அரசுகள் பாடத்திட்டத்தில் சேர்க்காமல் இருட்டடிப்பு செய்து வஞ்சித்துள்ளது .. மகா பாவம்…