அன்பே டயானா
தயாரிப்பு : மில்லியன் டாலர்
இயக்கம் : பாரி இளவழகன்
நடிப்பு : பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா, பரிதாங்கள் கோபி
ஒளிப்பதிவு : ஷெல்லி
இசை : பரத்சங்கர்
வெளியான தேதி : ஜூலை 17, 2026
நேரம் : 2 மணிநேரம் 10 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5
சென்னை பெரம்பூரில் வசிக்கும் தெலுங்கு பேசும் குடும்பத்தை சேர்ந்த பாரி இளவழகன், அதே ஏரியாவில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியன் பெண் ரம்யா ரங்க நாதனை காதலிக்கிறார். நம்ம ஜாதியில் தான் திருமணம் செய்யணும்னு மகனுக்கு கண்டிசன் போடுகிறார் அம்மா ரோஜா. தனது தம்பி மகளை ஹீரோவுக்கு திருமணம் செய்ய நினைக்கிறார் . குடும்பத்தில் பிரச்னைகள், காதலர்களுக்கு இடையே சண்டை. என்ன நடக்கிறது என்பதை காதல் காமெடி கலந்து சொல்லும் படம் அன்பே டயானா. பாரி இளவழகனே இயக்கி இருக்கிறார்
தெருகூத்து சம்பந்தப்பட்ட ஜமா படத்துக்குபின் பாரி இளவழகன் இயக்கி, நடித்து இருக்கிறார். பக்கா பெரம்பூர் பையனாக, ஹீரோயினிடம் காதல் சொல்ல முடியாமல் தவிப்பராக, அம்மாவுக்கு பயப்படுபவராக ஸ்கோர் பண்ணி இருக்கிறார். அவரின் லவ் சீன்கள் , அப்பாவிதனமான சீன் படத்தை கலர் புல்லாக்கி இருக்கிறது. மேக்கப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். காதல் தவிர, குடும்ப பிரச்னை, அப்பா பாசம், தம்பியுடன் மோதல் சீன்களிலும் மின்னுகிறார். அவருக்கு காமெடியும் வொர்க் அவுட்டாகி இருக்கிறது. ஆங்கிலோ பெண்ணாக, காதலியாக வரும் ரம்யா அந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறார். முதற்பாதியில் கொஞ்சம் அடக்கி வாசிப்பவர், இரண்டாம்பாதியில் மிரட்டியிருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட குடும்ப பின்னணி பிரஷ்.
12 ஆண்டு இடைவேளைக்குபின் அம்மா கேரக்டரில் நடித்த ரோஜாவுக்கு உண்மையிலே செம ரீ என்ட்ரி. ஜாதிப்பாசம் உடையவராக, தெலுங்கு பேசிக்கொண்டு தனக்காக சீன்களில் கலக்கியிருக்கிறார். அவருக்கும், கணவர் சேத்தனுக்குமான சென்டிமென்ட் சீன்கள் நிஜ வாழ்க்கையில் பல குடும்பங்களில் பார்ப்பது. இடைவேளைக்குபின் ரோஜா நடிப்பிலும் முதிர்ச்சி. மகள் வாழ்க்கை பிரச்னையில் அதிரடி முடிவெடுப்பது, மகன் கல்யாண கலாட்டாவில் சில விஷயங்களை செய்வது என மனதில் நிற்கிறார். இதுவரை பல படங்களில் வில்லனாக, சீரியசான ரோலில் நடித்த சேத்தன் இதில் ரயில்வே ஊழியராக, காது கேட்காமல் மிஷின் மாட்டிக்கொண்டு அலைபவராக, நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பவராக, சரக்கு போட்டுக் கொண்டு முன்னாள் காதலியை நினைத்து புலம்புவராக படம் முழுக்க ரவுண்டு கட்டி அடித்து இருக்கிறார். அவர் வரும் சீன்கள் கலகலப்பு, கைதட்டல். இனி சேத்தனை காமெடி கேரக்டரிலும் பார்க்கலாம். பரத்சங்கர் இசை, ஷெல்லி கேமரா படத்தை கலர் புல்லாக்கி இருக்கிறது.
பரிதாபங்கள் கோபி ஹீரோ பெங்களூர் நண்பனாக வருகிறார். அவரின் பாடிலாங்குவேஜ், ஹேர்ஸ்டைல், அந்த பெங்களூர் தமிழ் நல்ல பொழுதுபோக்கு. தமிழில் காமெடியனாக ஒரு ரவுண்ட் வர வாய்ப்பு. விவேக்குடன் பல படங்களில் காமெடியனாக நடித்த செல்முருகன் மாமாவாக வந்து தன் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார். ஹீரோ தம்பியாக சுதர்சன், அக்காவாக இஸ்மத்பானு இயல்பான நடிப்பை தந்து இ ருக்கிறார்கள். இப்படி காதல் கதையில் காமெடியை சேர்ந்து திரைக்கதையை சுவாரஸ்யமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
முதல் பாதி கொஞ்சம் டல் அடிக்கிறது. படத்தில் ஏகப்பட்ட தெலுங்கு வசனம், அதெல்லாம் அனைத்து தரப்புக்கும் புரியுமா என தெரியவில்லை. பெரம்பூர் பேக்கிரவுண்டில் இவ்வளவு விஷயங்களா? ஆங்கிலோ இந்தியன் பேமிலி இப்படி இருப்பாங்களா? தெலுங்கு பேசுகிறவர்கள் இப்படி இருப்பவர்களா என பல ஆச்சரியங்கள். ஆங்காங்கே சினிமாதனம் என சில மைனஸ் இருந்தாலும் கடைசி அரைமணி நேர அந்த கல்யாண கலாட்டா அனைத்தையும் மறக்க வைத்து சிரிக்க வைக்கிறது. ரோஜாவை பார்த்து உன் கடையில் மாவு வாங்குபவர்கள் உன் ஜாதி ஆட்களா என்ற கேள்வியும், தமிழ் பையன் கெட்டவங்க இல்லை என்ற ஆங்கிலோ இந்தியன் பேமிலி முடிவும் டச்சிங். தமிழ் சினிமாவில் இப்படி தெலுங்கு பேசும் குடும்பம், ஆங்கிலோ இந்தியன் குடும்பம், பெங்களூர் தமிழ் பேசும் நண்பன் பின்னணியில் படங்கள் வந்தது இல்லை. அதுவே அன்பே டயானாவுக்கு பிளஸ் ஆகியிருக்கிறது.
அன்பே டயானா... கொஞ்சம் காதல், கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் புதுசு