ஆஸ்திரேலியாவில் ஆசிரியையாக பணியாற்றும் 80களின் பிரபல குழந்தை நட்சத்திரம்
தமிழில் 1983ல் அபூர்வ சகோதரிகள் படம் மூலம் இரண்டு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீனா. அதன்பிறகு நாயகன் படத்தில் கமலின் மகளாக நடித்து பிரபலமான இவர் வசந்த் இயக்கத்தில் உருவான கேளடி கண்மணி படத்திலும் கவனம் ஈர்த்தார். வளர்ந்த பிறகு வயது வித்தியாச காதலை மையமாகக் கொண்டு உருவான விடுகதை படத்தில் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் சித்தி, அண்ணாமலை உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்த இவர் 22 வயதில் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கி ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் செட்டிலானார்.
அங்கே ஆரம்பத்தில் தனது கணவரின் ஹோட்டல் பிசினஸை கவனித்து வந்தாலும் அதன்பிறகு ஒரு வருட ஆசிரியர் படிப்பை முடித்து கல்வித்துறைக்கு மாறினார். முதலில் உதவி ஆசிரியராக பணியாற்றிய நீனா கடந்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளாக சிறப்பு கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். அது மட்டுமல்ல பள்ளி நேரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பு பிரிவில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலும் இருந்து வருகிறார் நீனா. தமிழ் நடிகை ஒருவர் ஆஸ்திரேலியாவில் ஆசிரியையாக பணியாற்றி வருவது ஆச்சரியமான விஷயம் தான்.