உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதை நாயகியாக ஜெயசுதா நடித்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது

கதை நாயகியாக ஜெயசுதா நடித்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது

ஸ்ரீகர் நயன் எழுதி இயக்கியுள்ள படம் 'சம்மர் ஹாலிடேஸ்'. தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தீரஜ் மொகிலினேனியும், விஜிபி நிறுவனம் சார்பில் கிரி பாபு வல்லபனேனியும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதில் ஜெயசுதா, ரோஹன் ராய், அருண் தேவ், குஷி, வாசுகி ஆனந்த், ராஜீவ் கனகலா, ஹர்ஷவர்தன், ரமணா பார்கவ், ஹர்ஷினி கோடூரி, மகேஷ் சிந்தலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கோதாவரி பகுதியின் அழகிய கிராமப் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த நகரத்து சிறுவனான ஆர்.வி. (அருண் தேவ்), கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது பாட்டி (ஜெயசுதா) வசிக்கும் கிராமத்திற்குச் செல்கிறான். அங்கு பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொண்டு வாழும் கே.வி. (ரோஹன் ராய்) என்ற உள்ளூர் சிறுவனைச் சந்திக்கிறான். வெவ்வேறு வாழ்க்கைச் சூழல்களில் இருந்து வந்தாலும், இருவருக்கும் இடையே அழகான நட்பு உருவாகிறது. சாதாரண கோடை விடுமுறையாகத் தொடங்கும் அவர்களது பயணம், புதிய அனுபவங்கள், சிரிப்பு, சாகசங்கள் மற்றும் வாழ்க்கைப் பாடங்கள் நிறைந்த மறக்க முடியாத பயணமாக மாறுகிறது. இதுதான் படத்தின் கதை.

படம் வருகிற டிசம்பர் 4ம் தேதி சோனி லைவ்வில் ஒளிபரப்பாகிறது. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.

படம் குறித்து ஜெயசுதா கூறுகையில், “குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதும் புத்துணர்ச்சியான அனுபவமாக இருக்கும். அவர்களது அப்பாவித்தனமும் இயல்பான செயல்பாடுகளும் 'சம்மர் ஹாலிடேஸ்' படத்தை எனக்கு மேலும் சிறப்பான அனுபவமாக மாற்றின. தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பையும், வளர்ந்து வரும் காலத்தின் மகிழ்ச்சியையும் இப்படம் அழகாக வெளிப்படுத்துகிறது. இப்படம் குடும்பங்களை ஒன்றிணைப்பதுடன், அவர்களது சொந்தக் கோடை விடுமுறை நினைவுகளையும் மீண்டும் நினைவுபடுத்தும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !