ஹாலிவுட் பாணியில் உருவாகும் சூப்பர் நேச்சுரல் மிஸ்ட்ரி த்ரில்லர் படம் 'தாயன்'
ஸ்காஸ்கா பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் டாடியானா பேபன்கோ மற்றும் பிரக்க்ஷை பாபு ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தாயன்'.
பா. சதாம் இப்படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, 'எதிர்நீச்சல்' சீரியல் புகழ் ராதிகா வைரவேலவன் (சாருபாலா) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர ரஷ்யா, சீனா மற்றும் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த நடிகர்கள் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் பா.சதாம் பேசும்போது, “தாயம் கேள்விப்பட்டிருப்போம். விளையாடியிருப்போம். ஆனால் 'தாயன்' என்பதை சக்திகளை உருச் செய்த ஒருவன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். தாயனின் சூப்பர் நேச்சுரல் திறனை இப்படத்தில் என்ஜாய் பண்ணிப் பார்க்கலாம். சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லரை இரசிப்பவர்களுக்கு 'தாயன்' விருந்து படைப்பான்.
ஹாலிவுட் படங்களில் வேறு வேறு நாட்டைச் சேர்ந்த பல நடிகர்கள் ஒன்றாக பங்கேற்றிருப்பார்கள். நாங்களும் இப்படத்தை ஆரம்பிக்கும் போதே அதே ஐடியாவுடன் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று சொல்வது போலத்தான் ஆரம்பித்தோம். குறிப்பாக, இந்த 'தாயன்' உலகத்தில் என்னதான் நடக்கிறது, ஊரோ மொழியோ இதில் எதையும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை. படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு த்ரில்லிங் சஸ்பென்ஸாகவே இருக்கும். தாயனின் திரைக்கதையை நான், சதீஷ்குமார் குளமந்தை, ராகினி கண்ணன் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி என நான்கு பேர் எழுதியிருக்கிறோம். பாடலையும் இளையராஜாவே எழுதியுள்ளார்'' என்கிறார்.