சென்னையின் பிரபல தியேட்டர் ஆல்பர்ட் நிரந்தரமாக மூடப்படுகிறதா ?
சென்னை மட்டுமல்லாது பிற நகரங்களிலும், சிறிய ஊர்களிலும் பல வருடங்களாக செயல்பட்டு வந்த சினிமா தியேட்டர்கள் மூடப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. சில இடங்களில் புதிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் கட்டப்பட்டு திறப்பதும் நடந்து வருகிறது.
இருந்தாலும் பல முக்கியமான தியேட்டர்கள் மூடப்படுவது சினிமா ரசிகர்களிடம் ஒரு வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த சில வருடங்களில் பல தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன.
கொரானோ காலத்திற்குப் பிறகு சென்னையில் ஏவிஎம் ராஜேஸ்வரி மகாராணி அகஸ்தியா, உதயம் காம்ப்ளக்ஸ், காமதேனு, ஸ்ரீபிருந்தா, எம்எம் தியேட்டர், ஆகியவை மூடப்பட்டன. அதற்கும் முன்பாக மூடப்பட்ட தியேட்டர்கள் என கணக்கில் கொண்டால் அந்தப் பட்டியல் நீளும்.
அபிராமி, சாந்தி, நாகேஷ், சபையர், கெயிட்டி, வெலிங்டன், ராக்ஸி, மேகலா, புவனேஸ்வரி, சித்ரா, கபாலி, உமா, ராஜகுமாரி, பாரகன், பிளாசா, நேஷனல், வாணி, வசந்தி, ஸ்டார், ஆனந்த், லியோ, அலங்கார், பைலட், பிரபாத், பிரைட்டன், சயானி, சன், மோட்சம், ராம், ஜெயப்ரதா, லிபர்ட்டி, மெலோடி, பத்மநாபா, பிராட்வே என நிறைய இருக்கிறது. இதில் சில தியேட்டர்கள் விடுபட்டிருந்தால் வாசகர்கள் கமெண்ட்டில் சேர்க்கலாம்.
எழும்பூர் ரயில் நிலையத்தின் மிக அருகில் அமைந்திருந்த ஆல்பர்ட், பேபி ஆல்பர்ட் தியேட்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே மூடப்பட்டது. தற்போது நிரந்தரமாக மூடப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
1984ல் துவங்கப்பட்ட இந்தத் தியேட்டர் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக சென்னை சினிமா ரசிகர்களின் முக்கிய தியேட்டர்களில் ஒன்றாக இருந்தது. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த பல படங்கள் அங்கு 100 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடியுள்ளன.
ஆல்பர்ட் தியேட்டர் 1200 சீட்டுகளைக் கொண்ட அரங்காகவும், பேபி ஆல்பர்ட் தியேட்டர் 240 சீட்டுகளைக் கொண்ட தியேட்டர்களாக இருந்தன.
இத்தியேட்டரில் தமிழக முதல்வர் விஜயின் கடைசி படமான ‛ஜனநாயகன்' படம் திரையிடப்பட்டது.
இத்தியேட்டர் வளாகம் மூடப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. இருப்பினும் மூடப்படுவதாக செய்தி பரவி வருகிறது.