உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: நடிகர் விஜய் நடிக்க இயலாமல் போன இயக்குநர் லிங்குசாமியின் திரைப்படங்கள்

பிளாஷ்பேக்: நடிகர் விஜய் நடிக்க இயலாமல் போன இயக்குநர் லிங்குசாமியின் திரைப்படங்கள்


எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகியோர் கோலோச்சியிருந்த தமிழ் திரைப்பட உலகில் அன்றிலிருந்து இன்றுவரை, உச்ச நடிகர்கள் தங்களுக்கான திரைப்படங்களை தெரிவு செய்வதில், தங்களது திறன் அறிந்து, தங்களுக்கான திரைப்படங்களை உருவாக்கித் தருவதில் நிபுணத்துவம் கொண்ட சில இயக்குனர்களை மட்டுமே தங்களது விருப்ப இயக்குனர்களாக வைத்திருப்பர். சிவாஜிக்கு ஒரு பீம்சிங், எம் ஜி ஆருக்கு ஒரு ப.நீலகண்டன் என்பது போல், அந்தந்த காலட்டத்திற்கேற்ப அன்றைய உச்ச நடிகர்களுக்கும் சில நம்பகத் தன்மையான இயக்குனர்கள் இருக்கத்தான் செய்தனர்.

இந்த நிலை ஒவ்வொரு காலகட்டத்திலும் நீடித்த வண்ணமாகவே இருந்தும் வந்திருக்கின்றது. சில நேரங்களில் ஒரு உச்ச நடிகரோ அல்லது முன்னணி இயக்குனரோ இவரது இயக்கத்தில் நாம் நடிக்கவில்லையே? இவரை வைத்து நாம் எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லையே? என்ற எண்ணம் அவர்களுக்குள் உருவாகி, அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று, பின் நேரம் கருதியோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ அதுவும் கைகூடாமல் போன நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. அப்படி ஒரு நிகழ்வாகத்தான் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இயலாமல் போன இந்தத் திரைப்படங்களையும் பார்க்கத் தோன்றுகிறது.

2001ம் ஆண்டு “ஆனந்தம்” என்ற ஒரு குடும்பப் பாங்கான வெற்றித் திரைப்படத்தைத் தந்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் இயக்குனர் என்.லிங்குசாமி. தனது முதல் திரைப்படத்திலிருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட கதைக்களத்தோடு தனது இரண்டாவது படைப்பான “ரன்” திரைப்படத்தைத் தந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார் இயக்குனர் லிங்குசாமி. திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து கல்லூரிப் படிப்பிற்காக சென்னை வரும் ஒரு இளைஞன் அங்குள்ள ஒரு மிகப்பெரிய தாதாவின் தங்கையைக் காதலிக்க, அதனால் ஏற்படும் இன்னல்களையும், சவால்களையும் சந்தித்து எவ்வாறு தன் காதலியின் கரம் பற்றுகிறான் என்பதை ஆக்ஷன் கலந்த ஒரு சுவாரஸ்யமான காதல் கதையாக இயக்குனர் லிங்குசாமி தந்த இந்தத் திரைப்படத்திற்கு நாயகனாக அவரது முதல் தேர்வாக இருந்தவர் நடிகர் விஜய். அப்போது நடிகர் விஜய் “தமிழன்”, “யூத்”, “பகவதி” போன்ற திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் இத்திரைப்படத்தைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டு, படத்தில் நடிக்க முடியாமல் போனது. பின்னர் நடிகர் மாதவனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, படத்தை எடுத்து வெளியிட்டார் லிங்குசாமி.

2005ம் ஆண்டு லிங்குசாமியின் மூன்றாவது படைப்பாக வெளிவந்த திரைப்படம்தான் “சண்டக்கோழி”. இத்திரைப்படத்தின் கதையும் நடிகர் விஜய்க்குதான் முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் இத்திரைப்படத்தையும் நடிகர் விஜய் தவிர்க்க, பின்னர் அந்த வாய்ப்பு நடிகர் விஷாலுக்கு சென்றிருக்கிறது. தனது அறிமுக திரைப்படமான “செல்லமே” என்ற ஒரு வெற்றித் திரைப்படத்தைத் தந்து, கலையுலகில் தனது கணக்கைத் தொடங்கியிருந்த நடிகர் விஷாலுக்கு கிடைத்த அடுத்த வாய்ப்பான இத்திரைப்படமும் ஒரு மெகா ஹிட் திரைப்படமாக அமைந்திருந்தது.

இதன் பின்னர் தனது “பையா” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிலம்பரசனுக்காக திரைக்கதை அமைத்து இயக்குனர் லிங்குசாமி இயக்கவிருந்த ஒரு திரைப்படம்தான் “வேட்டை”. காதல் கலந்த ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இத்திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென “வானம்” திரைப்படத்தின் பணிகளில் நடிகர் சிலம்பரசன் தீவிரமாக இருந்து வந்ததால் அவரும் இத்திரைப்படத்திலிருந்து விலகும் நிலை ஏற்பட, மீண்டும் லிங்குசாமி நடிகர் விஜயை இந்த இத்திரைப்படத்தில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ள, வேறொரு நடிகருக்காக எழுதப்பட்ட கதையில் நடிக்க விருப்பமின்றி நடிகர் விஜய்யும் மறுப்பு தெரிவித்ததால், நடிகர் ஆர்யாவை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, படத்தை தானே தயாரித்து, இயக்கி வெளியிட்டார். 2012 பொங்கல் வெளியீடாக வந்த இந்த திரைப்படமும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !