திரைத்துறையில் 15 ஆண்டுகள் நிறைவு; அனிருத் நெகிழ்ச்சி
இசையமைப்பாளர் அனிருத், ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலைவெறி' பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இப்படம் 2011ம் ஆண்டு நவம்பர் 16ல் வெளியானது. அந்த வகையில் இன்றுடன் அனிருத் திரையுலகில் கால்பதித்து 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனையொட்டி நெகிழ்ச்சியாக அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
அனிருத் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 15 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், எங்களின் முதல் பாடல் இவ்வுலகிற்குள் அடியெடுத்து வைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை, இது ஒரு தொடர்ச்சியான, தடையற்ற பயணமாக இருந்து வருகிறது. இசை, நினைவுகள், கொண்டாட்டம் மற்றும் மாயாஜாலம் நிறைந்த 15 ஆண்டுகள். தமிழ் முதல் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு, ஒரு இதயத்திலிருந்து கோடிக்கணக்கான உங்கள் இதயங்களுக்கு இசை சென்று சேர்ந்துள்ளது. சுயாதீன இசை (Independent music), எங்களுக்குப் பிடித்த சர்வதேசக் கலைஞர்களுடனான கனவுக் கூட்டணிகள், எந்த மொழியாக இருந்தாலும் எங்களைப் பாட அழைப்பவர்களுக்காகப் பாடுவது, மேலும் நாடு கண்ட மிகப்பெரிய வெற்றிப் படங்களில் பங்குபெறும் பாக்கியம் என அனைத்தும் கிடைத்துள்ளன.
இந்தப் பயணத்தில், நாட்டின் மிகச்சிறந்த இயக்குனர்கள், நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி, திரையுலகின் தலைசிறந்தவர்களுடன் இசையையும் நினைவுகளையும் உருவாக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
ஸ்ட்ரீமிங் சாதனைகள் மற்றும் கோடிக்கணக்கான செவிகளைச் சென்றடைந்தது முதல், உலகம் முழுவதும் அரங்கு நிறைந்த மைதானங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியது வரை; தரவரிசைப் பட்டியல்களில் முதலிடம் பிடித்தது முதல், ஆயிரக்கணக்கான குரல்கள் எங்கள் பாடல்களைத் திரும்பப் பாடியது வரை... எங்களுக்குக் கிடைத்த அன்பு அசாதாரணமானது. இசை நிகழ்ச்சிகளின் உற்சாகம், ஆற்றல் மற்றும் இசை எல்லைகளைக் கடந்து செல்வதைப் பார்க்கும் உணர்வு ஆகியவை நாங்கள் கனவில் மட்டுமே கண்ட தருணங்கள்.
ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு கூட்டணியும், ஒவ்வொரு சாதனையும், ஒவ்வொரு மேடையும், ஒவ்வொரு மைல்கல்லும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், 'எல்.ஐ.கே, ஜனநாயகன், டிசி, பாரடைஸ் மற்றும் ஜெயிலர் 2' ஆகிய படங்களுடன் இந்த 2026ம் ஆண்டு மிக அற்புதமாக அமைந்துள்ளது. 15 ஆண்டுகளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி என்ன இருக்க முடியும்!
இந்தப் பயணத்தின் அடுத்தகட்டமாக, எங்களின் புதிய முயற்சியான 'அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ்' (Albuquerque Records) ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. எங்களுக்கு இவ்வளவு கொடுத்த இசைத்துறைக்குத் திருப்பிக் கொடுப்பதற்கும், அடுத்த தலைமுறை இசை மற்றும் திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்க உதவுவதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
ஒவ்வொரு ஏற்றத்திலும், ஒவ்வொரு சவாலிலும், ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் நாங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம்; இனியும் ஓய்வெடுக்கும் எண்ணம் இல்லை. இவை அனைத்தையும் தொடங்கி வைத்த அதே இசைக் காதல்தான் எங்களைத் தொடர்ந்து இயக்குகிறது.
இப்போது எங்கள் மனதில் இருப்பது நன்றியுணர்வு மட்டுமே. எங்கள் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டவர்கள், கூடவே பாடியவர்கள், கொண்டாடியவர்கள், ஆதரவளித்தவர்கள் மற்றும் எங்களை நம்பியவர்கள் என அனைவருக்கும் — இந்தப் பயணம் எங்களுக்கு எவ்வளவு சொந்தமானதோ, அதே அளவு உங்களுக்கும் சொந்தமானது. 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. எண்ணற்ற நினைவுகள். துரத்துவதற்கு இன்னும் ஒரு மில்லியன் கனவுகள் உள்ளன. இப்போது மீண்டும் ஸ்டுடியோவிற்குத் திரும்புகிறோம், மிகச்சிறந்தவை இனிமேல்தான் வரவிருக்கின்றன. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன், மிக்க நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.