'கராத்தே பாபு' - சான்றிதழ் வழங்கிய ரிவைசிங் கமிட்டி ?
கவின் நடித்த 'டாடா' படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு அடுத்து இயக்கியுள்ள படம் 'கராத்தே பாபு'. ரவி மோகன், தவுதி ஜிவால் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 28ம் தேதியன்று வெளியாகும் என்று ஜூன் மாதம் அறிவித்திருந்தார்கள்.
ஆனால், அன்றைய தினம் படம் வெளியாகவில்லை. அதற்கடுத்து அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அப்போதும் படம் வெளியாகவில்லை.
படத்தைப் பார்த்த சென்சார் குழு, படத்திற்கு சான்றளிக்க மறுத்ததாகத் தகவல் வெளியானது. ஒரு முக்கிய அரசியல் புள்ளியைப் பற்றிய படமாக இருப்பதாகவும், நிகழ்கால அரசியல் தலைவர்கள் பற்றிய காட்சிகளும் இருப்பதாகவும் கூறி படத்தை ரிவைசிங் கமிட்டிக்குப் பரிந்துரைத்தார்களாம்.
ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்து தற்போது 'யுஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சரியான இடைவெளியில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.
பொங்கல் வரை அடுத்தடுத்து படங்களின் வெளியீடுகள் முடிவு செய்யப்பட்டிருப்பதால், அனேகமாக பொங்கலுக்குப் பிறகே படம் வெளியாகும் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.