கடவுள் உருவங்களாக ரசிகர்களின் மனங்களில் பதிந்த நடிகர், நடிகைகள்
கடவுள்கள், வரலாற்று நாயகர்கள் எப்படி இருப்பார்கள் என யாரும் நேரில் பார்த்தது கிடையாது. ஆனாலும் சில கடவுள்களின் பெயர்களை சொன்னாலே நமக்கு திரையில் அந்த கடவுளின் வேடத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் உருவங்கள் தான் நினைவிற்கு வரும். அப்படி கடவுள்களின் உருவங்களாகவே சினிமா ரசிகர்களின் மனதில் பதிந்த நடிகர், நடிகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சிவ பெருமான் (சிவாஜி கணேசன் & ஜெமினி கணேசன்)
சிவாஜி கணேசன்: திருவிளையாடல் படத்தில் சிவபெருமான் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். தனது கம்பீரான தோற்றம், குரல், நடிப்பு என அனைத்திலும் பிரம்மிக்க வைத்திருப்பார். திரையில் சிவாஜியின் நடிப்பை பார்க்கும் அனைவருக்கும், உண்மையில் சிவபெருமான் இப்படி தான் இருப்பாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும். எத்தனையோ நடிகர்கள் சிவபெருமான் வேடத்தில் நடித்திருந்தாலும் சிவ பெருமானை நினைத்ததும், அனைவரின் மனதிலும் சிவாஜி கணேசனின் உருவம் தான் நினைவிற்கு வரும். அதே போல் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் பெயர்களை சொன்னதும் சிவாஜியின் உருவம் தான் அனைவரின் மனதிலும் தோன்றும்.
ஜெமினி கணேசன்: கந்தன் கருணை திரைப்படத்தில் சாந்த சொரூபியான சிவனாக தோன்றி, பார்வதி தேவியுடன் உரையாடும் காட்சிகளிலும் அருள் பாலிக்கும் தருணங்களிலும் அமைதியின் வடிவமாகச் சிவனைப் பிரதிபலித்தார்.
அம்மன் & பார்வதி தேவி (கே.ஆர். விஜயா & சாவித்ரி)
கே.ஆர். விஜயா: தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என்று அழைக்கப்பட்டாலும், பக்தி படங்களில் அம்மன் என்றதும் நினைவிற்கு வருவது கே.ஆர். விஜயா தான். மேல்மருவத்தூர் அற்புதங்கள், கைகொடுப்பாள் கற்பகாம்பாள், ஆதிபராசக்தி, சமயபுரத்தாளே சாட்சி போன்ற ஏராளமான பக்தி திரைப்படங்களில் அம்மனாகவே வாழ்ந்து காட்டினார். இவரது அருள் நிறைந்த புன்னகையும் தோற்றமும் இவரை மக்கள் நிஜ தெய்வமாகவே பார்க்க வைத்தது.
சாவித்ரி: திருவிளையாடல் திரைப்படத்தில் பார்வதி தேவியாக நடித்த சாவித்ரி, சிவனுடன் கோபித்து பூலோகம் வரும் காட்சிகளிலும், அமைதியாக அருள்பாலிக்கும் காட்சிகளிலும் தெய்வீகக் கடாட்சத்தை வெளிப்படுத்தினார்.
தமிழ் கடவுள் முருகன் (சிவகுமார் & ஸ்ரீதேவி)
சிவகுமார்: கந்தன் கருணை திரைப்படத்தில் அழகன் முருகனாக சிவக்குமார் நடித்த நடிப்பு, தமிழ்க்கடவுள் முருகனின் தோற்றத்திற்கு ஒரு அழகிய அடையாளத்தைக் கொடுத்தது. இன்றும் முருகன் என்றதும் சிவக்குமாரின் முகம் தான் நமது கண் முன் வரும்.
ஸ்ரீதேவி: அதே போல் குழந்தை நட்சத்திரமாக பாலமுருகன் கதாபாத்திரத்தில் தோன்றி, குழந்தை முருகனாக அனைவரின் மனதிலும் பதிந்தவர் குழந்தை பருவ ஸ்ரீதேவியின் முகம் தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் & ஸ்ரீராமர் (என்.டி. ராமராவ் - N.T.R)
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் புராணக் கதாபாத்திரங்களின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவர் என்.டி.ஆர். சம்பூர்ண ராமாயணம் படத்தில் ஸ்ரீராமராகவும், மாயா பஜார், ஸ்ரீ கிருஷ்ணா, கர்ணன், அர்ஜுன யுத்தம் போன்ற படங்களில் ஸ்ரீகிருஷ்ணராகவும் இவர் திரையில் தோன்றிய போது, மக்கள் திரையரங்குகளைக் கோவிலாகக் கருதி, செருப்புகளை வெளியே கழற்றிவிட்டு உள்ளே சென்று கற்பூரம் காட்டி வழிபட்ட வரலாறு உண்டு.
ஸ்ரீ ராகவேந்திரர் (ரஜினிகாந்த்)
தனது வழக்கமான அதிரடி மற்றும் ஸ்டைல் கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, தனது 100-வது திரைப்படமான ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படத்தில் சுவாமி ராகவேந்திரராக ரஜினிகாந்த் நடித்தார். அதில் அவர் காட்டிய பக்தி பரவசமும், துறவற பாவனையும், சாந்தமும் ராகவேந்திரரின் பிம்பமாகவே ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றது. ரஜினியை சூப்பர் ஸ்டாராக கொண்டாடும் ரசிகர்கள் மனதில் குரு ராகவேந்திரரின் பெயரை சொன்னதும் தோன்றுவது ரஜினியின் முகம் தான்.
நாரத முனிவர் (டி.ஆர். மகாலிங்கம்)
அகத்தியர், திருவிளையாடல் போன்ற படங்களில் நாரதராக வந்து தனது வெண்கலக் குரலால் பாடல்கள் மூலம் நாரதர் என்றாலே டி.ஆர். மகாலிங்கத்தின் குரலும் தோற்றமும்தான் நினைவுக்கு வரும் அளவுக்குத் தடம் பதித்தார்.