உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: பெங்களூர் அரண்மனையில் படமாக்கப்பட்ட முதல் படம்

பிளாஷ்பேக்: பெங்களூர் அரண்மனையில் படமாக்கப்பட்ட முதல் படம்


பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய படம் 'கர்ணன்'. இப்படத்தில், சிவாஜி கர்ணனாக நடிக்க, என்.டி.ராமாராவ் கிருஷ்ணராக நடித்தார். இவர்கள் தவிர எஸ்.ஏ.அசோகன், முத்துராமன், சாவித்திரி, தேவிகா மற்றும் எம்.வி.ராஜம்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் இந்து காவியமான மகாபாரதத்தில் வரும் கர்ணனின் கதையை மையமாகக் கொண்டது.

இப்படத்திற்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைக்க, கண்ணதாசன் பாடல்களை எழுதினார். திரைக்கதையை ஏ.எஸ்.நாகராஜனும், வசனங்களை சக்தி டி.கே.கிருஷ்ணசாமியும் எழுதினர். முழுமையாக 'ஈஸ்ட்மேன்கலர்' தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.

இந்த படத்தில் வரும் துரியோதனின் அரண்மனை காட்சிகள் ஜெய்பூரில் உள்ள பல அரண்மனைகளில் எடுக்கப்பட்டது. கர்ணனின் அரண்மனையாக பெங்களூருவில் உள்ள பெங்களூரு பேலசில் படமாக்கப்பட்டது. இந்த அரண்மனையில் நடத்தப்பட்ட முதல் படப்பிடிப்பும் இதுதான் அதற்கு முன்பு பலர் கேட்டும் அனுமதி வழங்கப்படாத நிலையில் கர்ணனின் கதை என்பதால் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு கன்னட நடிகர் ராஜ்குமார் பெரிதும் உதவினர். அதன்பிறகு தொடர்ச்சியாக இந்த அரண்மனை படப்படிப்புக்கு விடப்பட்டது. கர்ணன் படமான காலத்தில் இந்த அரண்மனையின் வாடகை தினசரி 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது 5 லட்சம் என்கிறார்கள். சந்திரமுகி படத்தில் வரும் வேட்டையன் அரண்மனை காட்சிகள் இங்கு படமானது.

பெங்களூர் அரண்மனை: பெங்களூரில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று. இங்கிலாந்தில் அமைந்துள்ள விண்ட்ஸர் கேஸ்டில் என்னும் அரண்மனையை மாதிரியாய் கொண்டு அரண்மனை கட்டப்பட்டுள்ளது. 120 ஆண்டுகள் பழமையான இந்த அரண்மனை, சுற்றிலும் மரங்கள், தோட்டம், நுழைவாயிலில் பிரமாண்டமான கதவு, கோபுரங்கள் என கலைநயத்துடன் 430 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. மைசூர் மகாராஜா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் நுழைவுக் கட்டணம் இந்தியர்களுக்கு 225 ரூபாயும் வெளிநாட்டவர்களுக்கு 450 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !