மகாராஜா, ரைட் படங்களை தொடர்ந்து சீனாவுக்கு செல்லும் சங்கராபரணா
கன்னடத்தில் ஷைன் ஷெட்டி கதை, எழுதி கதாநாயகனாக நடித்துள்ள படம் சங்கராபரணா. அவருடன் மலையாள நடிகை தன்வி ராம் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற சுமந்த் பட் இயக்கத்தில், கடற்கரை பின்னணியில் அமைந்த த்ரில்லர்-டிராமா கதையில் இப்படம் தயாராகியுள்ளது.
39-வது சீனா பிலிம் கோல்டன் ரூஸ்டர் அண்ட் ஹண்ட்ரட் பிளவர்ஸ் திரைப்பட விழாவில் சுமந்த் பட்டின் சங்கராபரணா படத்தின் உலகளாவிய திரையிடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புகழ்பெற்ற சர்வதேச நிகழ்வில் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்ட முதல் கன்னட திரைப்படம் என்ற வரலாற்றுப் பெருமையை இப்படம் பெற்றுள்ளது.
முன்னதாக, தமிழில் மகாராஜா, ஹிந்தியில் ரைட் ஆகிய இந்தியப்படங்கள் இந்த விழாவில் பங்கேற்றதைத் தொடர்ந்து, தற்போது சங்கராபரணா படமும் உலகளாவிய சினிமா விரும்பிகள் மற்றும் நடுவர் குழுப் பிரதிநிதிகள் நிறைந்த அரங்கில் அதிகாரப்பூர்வமாகத் திரையிடப்பட்டது. ஆங்கில சப்-டைட்டில்களுடன் அதன் தாய்மொழியான கன்னடத்திலேயே திரையிடப்பட்ட இப்படத்தின் கதை, நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்பட விழாவின் சர்வதேச அரங்கில் படக்குழுவினர் கலந்து கொண்டபோது அவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்தன.