மூன்றாவது மனைவியுடனும் பவன் கல்யாண் பரஸ்பர பிரிவு
ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், அவரது மூன்றாவது மனைவி அன்னா கோனிடலா ஆகியோர் தங்களது பரஸ்பர பிரிவை அறிவித்துள்ளனர்.
இது குறித்து நேற்று அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியை ஒன்றாகக் கழித்த பிறகு, பரஸ்பர புரிதலுடனும் மரியாதையுடனும் பிரிந்து செல்ல நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
எங்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், நாங்கள் தொடர்ந்து நல்ல நண்பர்களாகவும், எங்கள் அருமையான பிள்ளைகளுக்கு அன்பான பெற்றோர்களாகவும் இருப்போம். எங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சியும் நலனுமே எப்போதும் எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.
எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின் போது, உங்கள் புரிதலையும், கனிவையும், எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதையும் எதிர்பார்க்கிறோம். இந்த நீண்ட பயணத்தில் எங்களுக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
பவன் கல்யாணுக்கு 1997ல் நந்தினி என்பருடன் திருமணம் நடைபெற்று இரண்டே வருடங்களில் 1999ல் பிரிந்தார்கள். 2008ல் அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. அதன்பின் தன்னுடன் இணைந்து நடித்த ரேணு தேசாய் என்ற நடிகையை 2001ல் இரண்டாவதாகத் திருமணம் செய்தார். அவர்கள் 2012ல் பிரிந்தார்கள். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.
அதற்கடுத்து 2013ல் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அன்னா லெஸ்னேவா என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.
கடந்த 2025ம் வருடம் பவன், அன்னா ஆகியோரின் மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூர் பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றார். அதன்பின் அன்னா கோனிடலா திருப்பதி சென்று வெங்கடேச பெருமாளுக்கு முடி காணிக்கை செய்தார்.
பத்து நாட்களுக்கு முன்பாக அன்னாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை பார்க்க முடியாமல் இருந்தது. அப்போதே ஏன் அன்னா அவரது கணக்கை முடக்கி வைத்துள்ளார் என்ற ஒரு சர்ச்சை எழுந்தது. கடந்த மார்ச் மாதம் தான் அவர் இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்து சில பதிவுகளை போட ஆரம்பித்தார்.
பவன் கல்யாண், அன்னா ஆகியோரது திடீர் பிரிவு, பவன் கல்யாண் ரசிகர்களுக்கும், அவரது ஜனசேனா கட்சி தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.