யோகி பாபுவின் 300வது படமான 'அர்ஜுனன் பேர் பத்து' நவ., 27ல் ரிலீஸ்
தேவ் சினிமாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள படம் 'அர்ஜுனன் பேர் பத்து'. இது யோகி பாபுவின் 300வது திரைப்படமாகும். அனாமிகா மஹி கதாநாயகியாக அறிமுகமாகிறார். காளி வெங்கட், அருள்தாஸ், அயலி மதன், சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, சவுந்தர்யா, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, பவா லட்சுமண், ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் லெனின் பாரதியும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், தனது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் கடினமாக உழைத்து ஒரு வாகனத்தை வாங்குகிறான். ஆனால், அந்த வாகனம் திருடுபோகிறது. அதனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவன் இறங்கும்போது, அந்த வாகனத்திற்குப் பலரும் உரிமை கொண்டாடுகின்றனர். இதன் பின்னணியில் செயல்படும் வாகனத் திருட்டு மாபியா கும்பலை மையமாகக் கொண்டு, உணர்ச்சிகளும் நகைச்சுவையும் கலந்த கமர்ஷியல் திரைப்படமாக 'அர்ஜுனன் பேர் பத்து' உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வரும் நவம்பர் 27ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.