உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மனைவிக்காக இன்றும் வீட்டில் தொடரும் நவராத்திரி கொண்டாட்டம் : இளையராஜா சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்

மனைவிக்காக இன்றும் வீட்டில் தொடரும் நவராத்திரி கொண்டாட்டம் : இளையராஜா சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்

சென்னை, தி நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா வீட்டு நவராத்திரி கொண்டாட்டம், கொலு ஆகியவை சினிமா, ஆன்மிக வட்டாரத்தில் பிரபலம். அவர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள கொலுவுக்கு சென்று பல முன்னணி பாடகர்கள், பாடகிகள், கர்நாடக சங்கீதப் பாடகிகள் பாடல் பாடுவதும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தாண்டு கர்நாடக இசை பாடகி எம்எஸ் சுப்புலட்சுமியின் கொள்ளு பேத்திகளான ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவின் இசை கச்சேரி நடந்துள்ளது. தனது வீட்டு கொலு பற்றி, தனது ஆரம்பகால சென்னை நாட்கள் குறித்து இளையராஜா மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, ‛‛1968-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நவராத்திரி விழா காலகட்டத்தில் தான் நான் சென்னை வந்தேன். அந்த நேரத்தில் நானும், அண்ணன் பாஸ்கர், பாரதிராஜா மூணு பேரும் சாப்பிடுறதுக்கு எதுவுமே இல்லாமல் மூன்று நாட்கள் பட்டினி கிடந்தோம். அப்போது ​வடபழனி கோவில் எதிரே இருக்கக்கூடிய வீதியில் நிறைய கடைகள் இருக்கும். நவராத்திரிக்காக மாலையில் பொரிகடலை, சுண்டல் கொடுப்பாங்க. எல்லாரும் வரிசையில் நின்னு வாங்கிட்டுப் போவாங்க.

​நானும், பாரதிராஜா, பாஸ்கர் மூணு பேரும் எந்தெந்த கடைகளில் கொடுக்கிறாங்களோ அதுல போய் வரிசையில் நின்று வாங்கி, அதை ரூமிற்கு கொண்டு போய் பேப்பரை விரிச்சு, அதுல பொரி, கடலை, சுண்டல் என்னென்ன இருக்கோ அதெல்லாம் போட்டு, அதைச் சாப்பிட்டுவிட்டு குவளையில் இருக்கக்கூடிய தண்ணீரை குடித்துவிட்டு படுப்பது வழக்கம். ​அப்படிக் கழிந்தது அந்த நவராத்திரி.

இதை என் மனைவிகிட்ட சொல்லி இருக்கிறேன். அதனால நவராத்திரி நேரத்துல வீட்டில் நல்லா விமரிசையாகக் கொண்டாடணும்னு நவராத்திரி விழாவை அவர்(மனைவி ஜீவா) தொடங்கினார். வீட்ல சின்ன கொலு வைக்க ஆரம்பிச்சா. மதிய நேரத்துல சாப்பாடு பொட்டலம் மாதிரி புளியோதரை, சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் பொட்டலமாக கொடுத்தார். நவராத்திரி நேரத்தில் இசைக் கலைஞர்களை அழைத்து கச்சேரி பண்ணுகிற அளவுக்கு அது வளர்ந்துவிட்டது. அந்த நேரத்திலும் எல்லோரும் சாப்பிட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்று எல்லோரையும் சாப்பிட வைத்துத்தான் அனுப்புவாள். ​அந்த வழக்கம் இன்னும் தொடர்கிறது.

​அதாவது நாங்கள் பட்டினி கிடந்த நேரத்தை நினைவில் வைத்து இதை செய்தார். நவராத்திரி விழாவில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்று ஒரு உணர்வு என் மனைவிக்கு ஏற்பட்டது. ​ஒரு நல்ல நிகழ்வாகத்தான் நினைக்கிறேன். ஆனால் இதை வெளியில் விளம்பரப்படுத்த வேண்டுமென்றோ, வெளியில் சொல்லணும் என்றோ நினைச்சதில்லை

இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !