உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 25வது நாளில் 150 கோடி டார்கெட்டை எட்டிப்பிடித்த 'மண்டாடி'

25வது நாளில் 150 கோடி டார்கெட்டை எட்டிப்பிடித்த 'மண்டாடி'


மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 10ம் தேதி வெளியான படம் 'மண்டாடி'. அதே தினத்தில் கார்த்தி நடித்த 'சர்தார் 2' படம் வெளியானாலும், அந்தப் போட்டியை சமாளித்து 'மண்டாடி' படம் நல்ல வரவேற்பையும், பெரிய வசூலையும் பெற்றுள்ளது.

நேற்றுடன் 25 நாளைக் கடந்துள்ள இப்படம் இன்னமும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. மதுரையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்று முதல் முறையாக ஒரு கோடி ரூபாய் நிகர வசூலை இப்படத்தின் 25வது நாளில் பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 30ம் தேதியன்று இப்படம் 140 கோடி வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. கடந்த வாரத்திலும் புதிய படங்கள் வெளியானாலும் இப்படத்திற்கான முன்பதிவு கடந்த மூன்று நாள் விடுமுறையிலும் சிறப்பாகவே இருந்ததாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 150 கோடி வசூலைக் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதையும் எட்டிப்பிடித்து சாதித்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலையும், உலகளவில் 150 கோடி வசூலையும் 'மண்டாடி' பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூரிக்கு அவருடைய திரையுலகப் பயணத்தில் மறக்க முடியாத ஒரு வெற்றியை இந்தப் படம் தந்துள்ளது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து பாராட்டி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !