‛கிளாடியேட்டர்ஸ்' டிரைலர் வெளியீடு ; தோல்வியை பார்த்து அஜித் பயந்தது இல்லை : ஷாலினி
கடந்த ஓராண்டுக்கு மேலாக கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித் குமார். இதில் சில போட்டிகளில் அவரது அணி வெற்றி பெற்று பரிசுகளை வென்றது. சமீபத்தில் லண்டனில் நடந்த கார் ரேஸில் கூட அவரது அணி பங்கேற்றது. இந்த போட்டியை முதல்வர் விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார். கடந்தவாரம் இந்த விஷயம் வைரலாக பேசப்பட்டது.
அஜித்தின் கார் ரேஸை மையமாக வைத்து ‛கிளாடியேட்டர்ஸ்' என்ற ஆவணப்படம் உருவாகி உள்ளது. இதை ஏஎல் விஜய் இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த ஆவணப்படத்தை தியேட்டரில் வெளியிட உள்ளனர். ஏற்கனவே இதன் டிரைலர் இருவாரங்களுக்கு முன் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இப்போது ரசிகர்கள் அனைவரின் பார்வைக்காக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
சுமார் 3:46 நிமிடம் ஓடும் இந்த டிரைலரில் அஜித், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக், அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா மற்றும் அவரது ரேஸ் குழுவில் உள்ள பலரும் இந்த ரேஸ் பற்றிய பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளனர். குறிப்பாக அஜித் பேசும்போது, ‛‛மோட்டர் ஸ்போர்ட்ஸ் உலகம் என்பது ரொம்ப பெருசு, அதில் உள்ள கவர்ச்சியும், ஸ்பீடும் மட்டும் முக்கியமல்ல, இங்கு ஒழுக்கமா, துல்லியமா, கணக்கு பண்ணி ரிஸ்க் எடுத்து சில நொடிகளுக்குள்ள முடிவுகளை எடுப்பது தான் முக்கியம்'' என பேசி உள்ளார்.
ஷாலினி பேசும்போது, ‛‛எல்லோருக்கும் அவரை நடிகராத்தான் தெரியும். ஆனால் அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டும்தான் எப்பவுமே அவரின் கனவு, லட்சியங்களை தேடி போற நபரைத் தெரியும். தோல்விகளை கண்டு அவர் பயந்ததை நான் பார்த்தது இல்லை. ஒரே இரவில் வெற்றியையும் அவர் எதிர்பார்த்தது இல்லை. அவர் திரும்பவும் ரேஸிற்கு வரக் காரணம், ஜெயிக்கணும், கோப்பை வாங்கணும் என்பதற்காக மட்டுமல்ல, எதுவும் சாத்தியமற்றது அல்ல என்ற அந்த சில நொடிப்பொழுதுக்காக மட்டும் தான். அவர் ரேஸ் டிராக்கில் இருக்கும்போது எனக்கு பதட்டமாக இருக்கும். ஆனால் அவரின் கனவை பார்க்கும்போது கண்டிப்பாக நான் அவருக்கு துணை நிற்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
‛கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதையடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‛டேர் டெவில்' என்ற படத்தில் அஜித் நடிக்கிறார். நவம்பர் முதல் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
டிரைலர் லிங்க் : https://x.com/SureshChandraa/status/2101289151039468024