சமந்தாவிற்கு பதிலாக ஸ்ருதிஹாசன்
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஸ்டோரி என்ற இந்தியா - இங்கிலாந்து கூட்டுத் தயாரிப்பில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க சமந்தா அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், சமந்தா தனது கர்ப்பக் காலம் காரணமாக திரைப்படங்களிலிருந்து இடைவெளி எடுத்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ஸ்ருதிஹாசன் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தை பாப்டா விருது பெற்ற பிலிப் ஜான் இயக்குகிறார். நிம்மி ஹரஸ்கமா மற்றும் பிலிப் ஜான் ஆகியோர் இணைந்து கதை எழுதியுள்ளனர். டிமேரி என். முராரி எழுதிய, தி அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக்கப்படுகிறது. சமந்தா இப்படத்தில் இணைந்தபோது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தற்போது ஸ்ருதிஹாசன் இதில் இணைந்துள்ளதாகக் கூறப்படும் தகவல் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்தியாவை பின்னணியாகக் கொண்ட கதைக் களத்தில், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த நிக்கில் என்ற வேல்ஸ் இளைஞன், தனது தாயின் மறைவுக்குப் பிறகு, பிரிந்து வாழும் தனது தந்தையைக் கண்டுபிடிக்க தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்கு வருகிறான். சென்னையில், தனது தேடலுக்கு உதவுவதற்காக, அனு என்ற திறமையான பெண் துப்பறியாளரை அவன் வேலைக்கு அமர்த்துகிறான். அந்த அனு என்ற வேடத்தில்தான் ஸ்ருதிஹாசன் இப்படத்தில் நடிக்கிறார்.