உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு

கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு

இந்திய சினிமாவில் உயர்ந்த விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஆனந்த் நாக்கிற்கு(78) வழங்கப்பட உள்ளது.

கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஆனந்த் நாக். 50 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இன்றைய சினிமா ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என்றால் கேஜிஎப் 1 திரைப்படத்தில் அந்த கதையை விவரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

கன்னட திரையுலகில் பல தசாப்தங்களாக தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்தவர் ஆனந்த் நாக். கன்னடத்தில் 1973ல் சங்கல்பா திரைப்படத்தின் மூலம் நாக் தனது முதல் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ஹம்சகீதே, சந்தனத கொம்பே, கணேஷனா மதுவே உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்தார். கன்னட சினிமா தாண்டி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடித்த 300 படங்களில் 250 படங்கள் கன்னட சினிமாவில் நடித்தது.

இந்திய சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்பைப் கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் 2024ம் ஆண்டுக்கான இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற செப்., 22ல் குஜராத்தில் நடக்கும் விழாவில் இந்த விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் ஆனந்த் நாக் பெறுகிறார்.

அனந்த் நாக் ஏற்கனவே கடந்த 2025ல் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து
‛‛தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வான புகழ்பெற்ற கலைஞர் ஆனந்த் நாக்கிற்கு வாழ்த்துகள். பல தசாப்தங்களாக, அவரது இயல்பான நடிப்பு, பன்முகத்தன்மை மற்றும் அபாரத் திறமை ஆகியவை இந்திய திரையுலகிலும், குறிப்பாக கன்னடத் திரையுலகிலும் ஆழமான முத்திரையை பதித்துள்ளன. அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனித்துவமான ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் அவர் அளித்துள்ளார். உண்மையிலேயே மிகச் சிறந்த கலைஞரான அவருக்கு இது மிகவும் தகுதியான ஒரு கவுரவமாகும்'' என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !