பிளாஷ்பேக் : “கண்ணகி” கதையை “கோவலன்” ஆக்க முயற்சித்து, பின் “தங்கப்பதுமை”யான பின்னணி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு உச்ச நடிகராக 1950களில் வருடத்திற்கு 8 முதல் 10 படங்கள் வரை நடித்து, வெளியிட்டுக் கொண்டிருந்த பிஸியான காலகட்டங்களில் 'ஜுபிடர் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரான கே சோமு, 1942ல் நடிகர் பியூ சின்னப்பா மற்றும் பி கண்ணாம்பா நடிப்பில் தனது 'ஜுபிடர் பிக்சர்ஸ்' மூலமாக தயாரித்திருந்த மாபெரும் வெற்றிச் சித்திரமான “கண்ணகி” திரைப்படத்தை மீண்டும் “கோவலன்” என்ற பெயரில் நடிகர் சிவாஜி கணேசனை வைத்து எடுக்கலாம் என முடிவு செய்து, அன்றைய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான சி என் அண்ணாதுரையிடம் தனது விருப்பத்தைக் கூறி, “கண்ணகி” திரைப்படத்தைப் பார்க்கச் செய்தார். இந்த ரீமேக் திரைப்படத்தை இயக்கவிருந்த இயக்குநர் ஏ எஸ் ஏ சாமியுடன் அமர்ந்து 'கண்ணகி' திரைப்படத்தைப் பார்த்த சி என் அண்ணாதுரை, படம் பார்த்த பின்னர், இந்தப் படத்தை ரீமேக் செய்தால் படம் வெற்றி பெறாது என்ற தனது கருத்தைக் கூற, திட்டத்தை வைவிட்டார் தயாரிப்பாளர் சோமு.
இருந்தாலும் கற்புக்கரசி “கண்ணகி” போல், கணவனை மீட்டெடுக்க போராடும் ஒரு பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை ஒன்றை படமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மேலோங்கியிருந்தது தயாரிப்பாளர் சோமுவிற்கு. இதன் விளைவாக எழுத்தாளரும், படத்தின் கதாசிரியருமான ராமனாதன் மற்றும் படத்தின் இயக்குநர் ஏஎஸ் சாமி ஆகிய இருவரும் 1954ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க திரைப்படமான “தி இஜிப்ஷியன்” என்ற ஆங்கில திரைப்படத்தைத் தழுவி ஒரு திரைக்கதையை அமைத்து “தங்கப்பதுமை” ஆக்கித் தந்தனர் தயாரிப்பாளர் சோமுவிற்கு.
ஏறக்குறைய “கண்ணகி” கதை சாயலில் உருவாக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் நாயகனாக மணிவண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், மணிவண்ணனின் மனைவி செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடிகை பத்மினியும் நடித்திருந்தனர். படத்தில் இடம் பெற்றிருந்த 'மாயா மோகினி' என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகைகள் அஞ்சலி தேவி, பி பானுமதி மற்றும் லலிதா ஆகியோரை படக்குழுவினர் அணுக, அவர்கள் அந்தக் கதபாத்திரத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவிக்க, பின் அந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்தான் நடிகை டி ஆர் ராஜகுமாரி.
எம்என் நம்பியார், எம்என் ராஜம், 'கலைவாணர்' என்எஸ் கிருஷ்ணன், டிபி முத்துலட்சுமி, குலதெய்வம் ராஜகோபால், டி பாலசுப்ரமணியம், ஆர் பாலசுப்ரமணியம், புளிமூட்டை ராமசாமி போன்ற திரைக்கலைஞர்கள் திறம்பட நடித்திருந்த இத்திரைப்படத்தின் கதையை அரு ராமனாதன் எழுத, திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் ஏ எஸ் ஏ சாமி. உடுமலை நாராயண கவி, பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம், அ மருதகாசி, கண்ணதாசன் ஆகியோர் பாடல்களை எழுத படத்திற்கு இசையமைத்திருந்தனர்
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. ஏறக்குறைய 15 பாடல்கள் வரை இடம் பெற்றிருந்த இத்திரைப்படத்தில், “என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்”, “இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே”, “ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே”, “முகத்தில் முகம் பார்க்கலாம்” போன்ற பாடல்கள் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருந்த பாடல்களாக அமைந்திருந்தன. 1959ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இத்திரைப்படம், தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ் பெற்ற திரைப்படமாக 6வது தேசிய திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.