உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரமத்தில் கிடைத்த சினிமா வாய்ப்பு, சீரிய நடிப்பால் உயர்ந்த 'காவியத் தலைவி' நடிகை சவுகார் ஜானகி

சிரமத்தில் கிடைத்த சினிமா வாய்ப்பு, சீரிய நடிப்பால் உயர்ந்த 'காவியத் தலைவி' நடிகை சவுகார் ஜானகி

சோகம், மிடுக்கு, நகைச்சுவை என்ற மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு ஒப்பற்ற திரை ஆளுமையாக ஏழு தசாப்தங்களுக்கும் மேல், தென்னிந்திய திரையுலகை தன்பால் ஈர்த்திருந்த திறமைமிகு திரைத் தாரகையாக பார்க்கப்பட்டவர்தான் நடிகை சவுகார் ஜானகி. இவரது தங்கை கிருஷ்ண குமாரி. அவரும் திரைப்பட நடிகையே.

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், மிகச் சிறிய வயதிலேயே திருமணம் புரிந்து, ஷில்லாங்கில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தங்கை கிருஷ்ண குமாரியின் சினிமா வாய்ப்பிற்காக, குடும்பத்துடன் சென்னை, ஜெமினி ஸ்டூடியோவிற்கு வந்து, இயக்குநர் பி புல்லையாவை சந்திக்கும் போதே நடிகை சவுகார் ஜானகி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

1949ம் ஆண்டு அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. சினிமா வாய்ப்பு கிடைத்து, தங்கை கிருஷ்ணகுமாரியும் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கவும் ஆரம்பித்து விட்டார். இதனிடையே தனிக்குடித்தனம் வந்த ஜானகியின் கணவருக்கு அப்போது நிரந்தர வருமானம் இல்லாததால், தானும் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட ஜானகி, சினிமாவில் நடிக்கும் தனது விருப்பத்தை தனது கணவரிடம் சொல்ல, நம்மை போன்றவர்களுக்கு சினிமா சரிபட்டு வராது. பின்னணிப் பாட்டுப் பாடுவதற்கு வேண்டுமானால் முயற்சி செய். வாய்ப்பு கிடைத்தால் பாடு என்று கணவர் ஆலோசனைக் கூறியிருக்கின்றார்.

ஷில்லாங் போவதற்கு முன்பு குடும்பம் சென்னையில் இருந்தபோது, 1946, 47 ஆகிய ஆண்டுகளில் வானொலியின் தெலுங்கு நிகழ்ச்சிகளில் பாடியும், நடித்தும் இருக்கிறார் ஜானகி. அப்போது வானொலி நிலையத்திற்கு வந்த இயக்குநர் பிஎன் ரெட்டி, ஜானகியைப் பார்த்து நீ சினிமாவில் நடிக்கின்றாயா? என்று கேட்டிருக்கின்றார். எனக்கு திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது என்று கூறி, அந்த வாய்ப்பை மறுத்திருக்கின்றார் ஜானகி. ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஜானகியைச் சூழ, மீண்டும் தன் கணவரிடம் நான் சினிமாவில் சேர முயற்சிக்கப் போகிறேன் என்ற தனது கருத்தை கூற, அதற்கு அவரது கணவர் முழு மனதோடு ஒப்புதலும் தரவில்லை. மறுக்கவும் இல்லை.

1949ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் தனது கணவரோடு சென்று இயக்குநர் பிஎன் ரெட்டியை சந்தித்தார் ஜானகி. சினிமா வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் ஒத்து வராது. நீ சினிமாவில் சேருவதை நான் விரும்பவில்லை என்று கூறியிருக்கின்றார் இயக்குநர் பிஎன் ரெட்டி. சினிமா மீது ஆர்வமோ அல்லது மோகமோ எனக்கு இல்லை. ஒரு காலத்தில் இருந்தது. அந்த மோகம் எல்லாம் எப்போதோ செத்துவிட்டது. இப்போது என் வாழ்க்கையை நடத்த வாழ்க்கைப் பிரச்சனைகளை சமாளிக்க சினிமாவைத் தேடி வந்திருக்கின்றேன். எனக்கு நீங்கள் உதவி செய்தே ஆக வேண்டும் என்ற தனது விருப்பத்தை தீர்க்கமாக அவரிடம் எடுத்துச் சொன்னார் ஜானகி.

பின்னர் இயக்குநர் பிஎன் ரெட்டி தனது தம்பி நாகிரெட்டியிடம் சொல்ல, இயக்குநர் எல் வி பிரசாத் இயக்கத்தில் உருவான “சவுகார்” தெலுங்குத் திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு ஜானகிக்கு கிடைத்து நாயகியானார். படம் பிரமாதமான வெற்றியைப் பெற, வெறும் ஜானகியாய் இருந்த இவர், அன்றிலிருந்து 'சவுகார்' ஜானகியானார். ஒரு குழந்தைக்குத் தாயான பிறகு, சினிமா வாய்ப்புத் தேடி, அதன் பின் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் 400 படங்களில் நடித்து உச்சம் தொட்ட ஒரே திரை ஆளுமை இந்தக் “காவியத் தலைவி” சவுகார் ஜானகி மட்டுமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !