தடையை மீறி முன்னேறுங்கள் : மாணவிகளுக்கு உற்சாகம் அளித்த நிவின்பாலி
மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி, மாமிதா பைஜூ நடிப்பில் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக 'பெத்லகேம் குடும்ப யூனிட்' என்கிற படம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் கொச்சியில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் இதன் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நிவின் பாலி, இளம் பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக சில அறிவுரைகளைக் கூறியுள்ளார்.
இது குறித்து நிவின்பாலி பேசும்போது, கல்லூரி காலம் என்பது வாழ்வின் பொற்காலம்; அதை முழுமையாக அனுபவித்து வாழ வேண்டும். தோல்வி பயம், கேலி, கிண்டல் என எது இருந்தாலும் தயக்கமின்றி முன்னேறுங்கள். இளம் பெண்கள் மீது குடும்பம், கல்லூரி மற்றும் விடுதிகளில் எங்கு செல்ல வேண்டும், எத்தனை மணிக்கு வர வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன; இவற்றை மீறி முன்னேறுங்கள். நீங்கள் அடைய முடியாத உயரம் என்று எதுவுமில்லை, உங்களால் கடக்க முடியாத தூரம் என்றும் எதுவும் இல்லை என்று அவர் உற்சாகப்படுத்தியுள்ளார்.