இயக்குனர் அருண்ராஜா படம் கைவிடப்பட்டது : விஷ்ணு விஷால் அறிவிப்பு
கட்டா குஸ்தி 2 படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் ‛இரண்டு வானம்' படம் வெளியாக உள்ளது. இதுதவிர அவர் கைவசம் மூன்று, நான்கு படங்கள் உள்ளன. அதில் ஒன்றாக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் உடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. இதற்கான பணிகள் எல்லாம் ஏற்கனவே துவங்கி நடந்து வந்த நிலையில் தற்போது அந்த படம் கைவிடப்படுவதாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கை :
இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் நான் அடுத்ததாக பணியாற்றவிருந்த படம் குறித்து தெளிவுபடுத்துவது எனது கடமை. ஒரு வருடமாக இந்த படத்தை எதிர்பார்த்தேன். 10 மாதங்களாக தீவிரமாக இதற்கு தயாராகினேன். சமீபத்தில் இந்தப் படத்தின் இயக்குநருடனான கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகள் மற்றும் பட்ஜெட் தொடர்பான சிக்கல்கள் ஆகியவை ஏற்பட்டது. இந்தப் படத்தை சாத்தியமாக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும், இனி தொடர வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இது எனக்கும் அருண்ராஜா காமராஜுக்கும் எளிதான முடிவு அல்ல என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இருந்தாலும், இந்தப் படத்திலிருந்து நாங்கள் இருவரும் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள், அதற்குரிய காலத்தில் நடைபெற்று முடிவுக்கு வரும்.ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் என்ற பொறுப்பையும் ஏற்றிருக்கும் நிலையில், சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த முடிவும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
அதே நேரத்தில், மிகவும் சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமானமான ஒரு விஷயத்திலும் பணியாற்றி வருகிறேன். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிக விரைவில் வெளியிடவுள்ளேன்.
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.