உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஒரே கதையை ஆறு மொழிகளில் தயாரித்து இயக்கி வெற்றிகண்ட பழம்பெரும் திரைக்கலைஞர்

பிளாஷ்பேக்: ஒரே கதையை ஆறு மொழிகளில் தயாரித்து இயக்கி வெற்றிகண்ட பழம்பெரும் திரைக்கலைஞர்


ஆரம்பகால தமிழ் சினிமா வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய தலைசிறந்த தயாரிப்பு நிறுவனங்களான “ஜூபிடர் பிக்சர்ஸ்”, “மாடர்ன் தியேட்டர்ஸ்”, “ஜெமினி ஸ்டூடியோஸ்”, “ஏ வி எம்”, “விஜயா வாஹினி”, போன்ற புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனங்களின் வரிசையில், அவற்றிற்கு இணையான ஒன்றாக பார்க்கப்பட்டு வந்த ஒரு தயாரிப்பு நிறுவனம்தான் கோவையை மையமாகக் கொண்டு இயங்கி வந்த “பக்ஷிராஜா ஸ்டூடியோஸ்”. இதனை நிறுவியவர் பிரபல படத் தயாரிப்பாளர் மற்றும் புகழ்பெற்ற இயக்குநர் எஸ் எம் ஸ்ரீராமுலு நாயுடு. எம் கே தியாகராஜ பாகவதரின் “சிவகவி”, பி யூ சின்னப்பாவின் “ஜகதலப்பிரதாபன்” ஆகிய மாபெரும் வெற்றித் திரைக் காவியங்களை தனது “பக்ஷிராஜா ஸ்டூடியோஸ்” என்ற பதாகையின் கீழ் தயாரித்து, படங்களை இயக்கி வெற்றி கண்ட இவரது மற்றுமொரு மாபெரும் வெற்றிச் சித்திரம்தான் “மலைக்கள்ளன்”.

மாநில ஆஸ்தான கவிஞராக இருந்து வந்த தேசியக் கவிஞர் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் நாவல்தான் “மலைக்கள்ளன்”. அன்றைய நாளில் உயர்நிலைப் பள்ளிகளில் “மலைக்கள்ளன்” கதை துணைப் பாடநூலாக அறிவிக்கப்பட்டு ஏராளமாக விற்பனை செய்யப்பட்டும் வந்தன. “பக்ஷிராஜா ஸ்டூடியோஸ்” பட அதிபர் எஸ் எம் ஸ்ரீராமுலு நாயுடு அந்தக் கதையை அவரிடம் இருந்து வாங்கி, எம் ஜி ஆரை நாயகனாக நடிக்க வைத்து திரைப்படமாக எடுக்க முற்பட்டார். அரசியல் கலப்பு ஏதுமின்றி மு கருணாநிதியிடம் வசனங்களையும் எழுதி வாங்கிப் பெற்றுக் கொண்டார். எம் ஜி ஆர், பி பானுமதி, எம் ஜி சக்கரபாணி, டி எஸ் துரைராஜ், ஸ்ரீராம், பி எஸ் ஞானம், ஏழுமலை, ஈ ஆர் சகாதேவன் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்தை தயாரித்திருந்ததோடு, படத்தை இயக்கியும் இருந்தார் எஸ் எம் ஸ்ரீராமுலு நாயுடு.

சாகசக் காட்சிகளும், நகைச்சுவை காட்சிகளும் இணைந்திருந்த ஒரு கலவையாக திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருந்தார் எஸ் எம் ஸ்ரீராமுலு நாயுடு. “ராஜகுமாரி”, “மருதநாட்டு இளவரசி”, “மந்திரிகுமாரி”, “சர்வாதிகாரி”, “மர்மயோகி” போன்ற திரைப்படங்கள் மூலம் ஒரு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருந்த நடிகர் எம் ஜி ஆர், இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பின் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்தவரானார். 1954ல் வெளிவந்த இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை ருசித்த பட அதிபர் எஸ் எம் ஸ்ரீராமுலு நாயுடு, இதே கதையை தெலுங்கில் நடிகர் என் டி ராமாராவ் நடிக்க “அக்கி ராமுடு” என்றும், ஹிந்தியில் நடிகர் திலீப்குமார் நடிக்க “ஆசாத்” என்றும், கன்னடத்தில் நடிகர் கல்யாண்குமார் நடிக்க “பெட்டட கல்லா” என்றும், மலையாளத்தில் நடிகர் சத்யன் நடிக்க “தஸ்கர வீரன்” என்றும், சிங்களத்தில் சிங்கள நடிகர் காந்தி குணதுங்கா என்ற நடிகர் நடிக்க “சூரசேனா” என்ற பெயரிலும் எடுத்து, வெளியிட்டதன் மூலம் மொத்தம் ஆறு மொழிகளில் இந்தக் கதையை திரைப்படமாக தயாரித்து இயக்கி, வெற்றி பெற்றதோடு, தமிழ் திரையுலகின் தரத்தை தரணி எங்கும் அறியச் செய்த ஒரு தனிப்பெரும் திரை ஆளுமையாக பார்க்கப்பட்டார் பழம்பெரும் திரைப்பட அதிபரும், இயக்குநருமான எஸ் எம் ஸ்ரீராமுலு நாயுடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !