'லோகா' முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்த 'தொடக்கம்'
மோகன்லால் மகள் விஸ்மயா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள 'தொடக்கம்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள இதில் மோகன்லாலும் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் முதல் நாளில் உலக அளவில் 6.86 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த வருடம் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான 'லோகா சாப்டர் 1 ; சந்திரா' திரைப்படம் முதல் நாளில் 6.63 கோடி வசூலித்திருந்த நிலையில், அந்த சாதனையை 'தொடக்கம்' திரைப்படம் முறியடித்துள்ளது.
மோகன்லாலின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளதாலும், மோகன்லாலும் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாலும், 200 கோடிக்கு மேல் வசூலித்த '2018' திரைப்படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய படம் என்பதாலும் இப்படத்திற்கு முதல் நாளே மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் கிடைத்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸில் சொல்லப்படுகிறது. இந்திய அளவில் 2.96 கோடி வசூலித்துள்ள இந்தப் படம், வெளிநாடுகளில் 3.90 கோடி வசூலித்துள்ளதே இதற்கு சாட்சி.