பிளாஷ்பேக் : தெலுங்கில் வெள்ளி விழா கொண்டாடி, தமிழில் தோல்வி அடைந்த கதை
தெலுங்கில் சிரஞ்சீவி, விஜயசாந்தி, ராதா நடிப்பில் 1988ம் ஆண்டு வெளிவந்த படம் 'எமுடுக்கி மொகுடு'. ரவி ராஜா பினிசெட்டி இயக்கிய இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. ஆக்ஷனும், காமெடியும் நிறைந்த இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்க விரும்பினார் ரஜினி. இதனை தனது ஆஸ்தான இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் சொல்ல அவரே தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவிடம் விஷயத்தை சொன்னார்.
ரஜினி ஸ்கிரீனில் வந்தாலே படம் ஹிட் என்றிருந்த காலத்தில் 'அதிசய பிறவி' என்ற பெயரில் உடனடியாக ரீமேக் ஆனது. ரஜினியுடன் கனகா, நாகேஷ், ஜெய்கணேஷ், விஜயலலிதா, சுதாகர், செந்தாமரை உள்ளிட்ட பலர் நடித்தனர். ஏழையான ரஜினியை பணக்கார வீட்டு பெண் காதலிப்பார். இது பிடிக்காத பணக்காரர் ரஜினியை விபத்து ஏற்படுத்தி கொன்று விடுகிறார். இறந்த ரஜினி எமனிடம் நியாயம் கேட்க அவரோ ரஜினிக்கு மறுவாழ்வு கொடுத்து பூமிக்கு அனுப்புகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
லாஜிக் இல்லாத இந்த புனைவுக் கதையை தெலுங்கு ரசிகர்கள் ரசித்தார்கள். தமிழ் ரசிகர்கள் லாஜிக் பற்றி கேள்விகேட்டே படத்தை தோல்வியடையச் செய்தார்கள். ரஜினியை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய தோல்விகளிலும் இதுவும் ஒன்று. சினிமா ரசிப்பு தன்மை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பதை இந்த படம் உணர்த்தியாக பின்னாளில் ரஜினி கூறியிருந்தார்.