'நெடுங்கண்டம் மிராக்கிள்' : மோகன்லாலின் புதிய படம் அறிவிப்பு
மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'திரிஷ்யம் 3' திரைப்படம் வெளியாகி சுமார் 250 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது ஏற்கனவே வெற்றி பெற்ற தனது தொடரும் படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் இணைந்து 'அதி மனோகரம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். இது தவிர, சத்யன் அந்திக்காடு மற்றும் மேஜர் ரவி ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார்.
இதுதவிர, பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனரான திலீஷ் போத்தன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கிறார் என நீண்ட நாட்களாகவே சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில், இதை உறுதி செய்யும் விதமாக இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்திற்கு 'நெடுங்கண்டம் மிராக்கிள்' என டைட்டில் வைக்கப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
நெடுங்கண்டம் என்பது தமிழக எல்லைப் பகுதியை அடுத்துள்ள கேரள மாநிலத்தில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்தப் படத்திற்கு ஷ்யாம் புஷ்கரன் மற்றும் பால்சன் ஸ்காரியா இணைந்து திரைக்கதை எழுதுகின்றனர். திலீஷ் போத்தனின் முதல் படமான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்திலிருந்து கதாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் அவருடன் இணைந்து தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.