உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தற்காலிகக் குழுவுக்கு நீதிமன்றம் தடை ; ஸ்வேதா மேனனே தலைவர் பதவியில் தொடர்கிறார்

தற்காலிகக் குழுவுக்கு நீதிமன்றம் தடை ; ஸ்வேதா மேனனே தலைவர் பதவியில் தொடர்கிறார்


மலையாளத் திரையுலகில் நடிகர்களின் நலனுக்காக 'அம்மா' என்கிற பெயரில் நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாகவே நடிகர் சங்கம் தொடர்பாகப் பல பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. கடந்த வருடம் மோகன்லால் தலைமையிலான நிர்வாகக் குழு ராஜினாமா செய்த பின் நடைபெற்ற தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு சில நாட்களாகவே நடிகர் சங்க நிர்வாகிகள் பலர் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி, சங்க விஷயத்தைக் காவல் நிலையம், நீதிமன்றம் வரை கொண்டு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, நடிகை ஸ்வேதா மேனன் தலைமையிலான நிர்வாகக் குழு தாங்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தது. இதனால், கேரள அரசு நடிகர் ரமேஷ் பிஷரோடி தலைமையில் தற்காலிக நிர்வாகக் குழுவை நியமித்தது. ஆனால், திடீரென ஏற்பட்ட மன மாற்றத்தால், மீண்டும் தலைவர் பதவியில் தான் தொடர விரும்புவதாக பல்டி அடித்தார் ஸ்வேதா மேனன். அதற்கு ஏற்றபடி அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்படாமல் இருந்தது. அது மட்டுமல்லாமல், மீண்டும் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தித்தான் புதிய உறுப்பினர்கள் வரவேண்டுமே தவிர, குறுக்கு வழியில் யாரும் சங்கத்தைக் கைப்பற்றக் கூடாது என்று கூறிய ஸ்வேதா மேனன், தற்காலிக நிர்வாகக் குழுவைத் தடை செய்யுமாறு எர்ணாகுளம் முன்சீப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, தற்காலிக நிர்வாகக்குழு செயல்பாட்டிற்குத் தடை விதித்த நீதிமன்றம், ஸ்வேதா மேனன் தலைமையிலான குழு தொடர்ந்து செயல்படலாம் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, தற்காலிகக் குழுத் தலைவரான ரமேஷ் பிஷரோடி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். ஸ்வேதா மேனன் தனது இந்த மாற்றத்திற்கு காரணம் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி தான் என்றும், அவர்கள் தான் தன்னை உறுதியாக இருக்கச் சொன்னதாகவும், தலைவர் பதவியில் தொடரச் சொன்னதாகவும் கூறியுள்ளதுடன், அவர்களுக்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !