இளம் நடிகைகள் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறார்கள் ; அக்ஷய் குமார் வருத்தம்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தற்போதும் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடிக்கும் ஹீரோ என்கிற சாதனையைத் தானே வைத்துள்ளார். இந்த நிலையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'வெல்கம் டு தி ஜங்கிள்' திரைப்படம் வரும் ஜூன் 26ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் அக்ஷய் குமாருடன் சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல், ரவீனா டாண்டன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளனர். 58 வயதாகும் அவர், இளம் கதாநாயகிகளுடன் ஜோடியாக இணைந்து நடிக்கும்போது அவ்வப்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவார். அதேபோல மறுபக்கம், இரண்டு-மூன்று ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் மல்டி-ஸ்டாரர் படங்களில் நடிப்பதற்கும் அவர் தயங்குவதில்லை.
சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் பேசும்போது, இன்றைய நடிகைகள் மிகவும் தொழில்முறைத் திறன் கொண்டவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் பழைய காலத்து நடிகைகளுடன் ஒப்பிடும்போது, இன்றைய நடிகைகள் பெரிய ரிஸ்க்குகளை எடுக்கத் தயங்குகின்றனர். அதுமட்டுமல்ல, மல்டி-ஸ்டாரர் படங்களில் நடிக்க முன்வருவதில்லை; ஏன் நடிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. இத்தகைய படங்களில் அவர்கள் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.