'நந்தன்' படத்திற்கு டில்லி தமிழ் சங்கம் கவுரவம்
2024ல் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் 'நந்தன்'. தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் போராடும் நிஜத்தை 'நந்தன்' படத்தில் கதையாக்கி இருந்தார்கள். படம் வெளியான பிறகு தமிழகம் முழுக்க தலித் பஞ்சாயத்து தலைவர்கள் சுதந்திரமாக கொடியேற்றவும், உரிய அதிகாரங்களை அடையவும் அதிரடியாக உத்தரவிட்டது தமிழக அரசு.
இந்நிலையில், சமூக மாற்றத்தை நிகழ்த்திய திரைப்படமாக 'நந்தன்' படத்தைத் தேர்ந்தெடுத்து நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா.சரவணன் இருவருக்கும் பாராட்டு விழா நடத்தி இருக்கிறது டில்லி தமிழ்ச் சங்கம். விழாவில் இந்திய கலாச்சார அமைச்சகத்தின் இயக்குநர் ஷா பெஷல் மிகிஷி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். டில்லி தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளர் சத்யா அசோகன், இணைத் தலைவர் மகேந்திரன், தயாரிப்பாளர் சிவா மற்றும் டில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சசிகுமார் பேசும்போது “படத்தில் நான் பட்ட சிரமங்கள் யாவும் டில்லி மக்களின் பாராட்டில் சரியாகிவிட்டன. 'நந்தன்' படம் வெளியான பிறகு எங்களுக்கு விடிவு பிறந்திருப்பதாக ஒரு பெண் பஞ்சாயத்து தலைவர் என் கைகளைப் பிடித்து அழுதார். அந்தக் கண்ணீர் தேசிய விருதுக்கு நிகரானது” என்றார்.