விருது பெற்ற கதாசிரியருக்கு பதிலாக குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்ட கேரள அரசு இதழ்
கேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சமீபத்தில் தங்களது அதிகாரப்பூர்வ இதழை வெளியிட்டது. இதில் 49வது கேரளா திரைப்பட விமர்சகர்கள் விருதுகள் குறித்த செய்தியில் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதைப் பெற்ற ராஜேஷ் தில்லங்கேரி என்பவரின் புகைப்படத்திற்கு பதிலாக, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆகாஷ் தில்லங்கேரி என்பவரின் புகைப்படம் தவறாக அச்சிடப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் வெளியான எ பிரெக்னன்ட் விடா என்கிற படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றிருந்தார் ராஜேஷ் தில்லங்கேரி. தற்போது ஒரு குற்றவாளியின் புகைப்படம் தனது பெயருடன் வெளியாகி இருப்பதால் பலரும் அவரை தொடர்புகொண்டு, நீங்கள் குற்றவாளியா? எனக் கேட்கத் தொடங்கினர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு அவர் ஆளானார்.
இதனால் ராஜேஷ் தில்லங்கேரி, கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மீது சட்டப்படி மானநஷ்ட ஈடு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இந்த விஷயம் தெரியவந்த பிறகு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிர்வாகம் தங்களுடைய இணையதளத்தில் மட்டும் இந்த புகைப்படத்தை மாற்றிக் கொண்டதே தவிர, வெளியிடப்பட்ட இதழ்களில் இதுவரை எதுவும் திருத்தம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.