'கான் சிட்டி' படத்தில் பாதி சம்பளம் வாங்கி நடித்த யோகிபாபு
ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன்தாஸ், அன்னாபென், யோகிபாபு வடிவுக்கரசி நடித்த 'கான்சிட்டி' படம் ஜூன் 26ல் ரிலீஸ் ஆகிறது. சென்னையில் நடந்த விழாவில் யோகிபாபு பேசுகையில் ''எனக்கும், அர்ஜூன் தாஸுடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. தொடர்ந்து அவருடன் படங்களில் பணியாற்றி வருகிறேன். ஒரு ஹீரோவுக்கு நல்ல நண்பன் இருந்தாலே போதும், ஹீரோயின் கூட தேவையில்லை என்று நான் அடிக்கடி நகைச்சுவையாக சொல்வேன். அந்த அளவுக்கு எங்களுடைய நட்பு நெருக்கமானது. அவர் அடுத்த படங்களிலும் என்னை நடிக்க வைப்பார்.
இயக்குனர் ஹரிஷை நான் இன்றல்ல, பல ஆண்டுகளாக அறிவேன். பல படங்களில் பணியாற்றிய காலத்திலிருந்தே அவருடைய உழைப்பையும், சினிமா மீதான அர்ப்பணிப்பையும் பார்த்திருக்கிறேன். அவர் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையை பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தியிருந்தார். அப்போது கூட நான் அவரிடம், 'நீ கண்டிப்பாக இயக்குநராக வேண்டும்' என்று சொன்னவன்.
இன்று அவர் இயக்குநராக உருவாகி, அவரைப் பற்றி அனைவரும் இவ்வளவு பாராட்டிப் பேசுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஆரம்பம் மட்டுமே. இதைத் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன், பெரிய படங்களை இயக்கி இன்னும் உயரங்களுக்கு செல்ல வேண்டும் '' என்றார்.
இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் பேசுகையில், ''கடந்த 5 ஆண்டுகளாக சினிமா வாய்ப்புக்காக போராடுகிறேன். இந்த படத்தில் இயக்குனர் ஆனேன். யோகிபாபுவை நடிக்க வைக்க விரும்பினேன். அவர் தனது வழக்கமான சம்பளத்தில் பாதி வாங்கிவிட்டு நடித்தார். எனக்காக அப்படி நடித்தார்'' என்றார்.
தான் நடித்த பல படங்களில் நிகழ்ச்சிகளுக்கு வராத யோகிபாபு கான்சிட்டிக்கு வந்தார். உதவி இயக்குனராக பல படங்களில் இயக்குனர் ஹரிசுடன் நட்பு என்பதால் இந்த சிறப்பு சலுகையாம்.