தனுஷ் 55 பட தலைப்பு 'ஓம்' : அக்., 16ல் ரிலீஸ்
'அமரன்' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் தனுஷின் 55வது படத்தை இயக்கி வருகிறார். முக்கிய வேடத்தில் மம்முட்டியும், நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரும் நடிக்கின்றனர். ஆர்டேக் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனுஷூம் தயாரிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு 'ஓம்' என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். வீடியோவை பார்க்கையில் இது 'புஷ்பா' படம் மாதிரி செம்மரம் தொடர்பான பின்னணியில் இருக்கும் என தெரிகிறது. அதோடு படம் வரும் அக்., 16ல் ரிலீஸ் எனவும் அறிவித்துள்ளனர்.
படத்தலைப்பு வெளியிட்டு ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில், ''தலைப்பு தெய்வீகமாக தெரிந்தாலும் இதில் உணர்ப்பூர்வமான விஷயங்கள் இருக்கிறது. 65 % படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தனுஷ் சினிமா வாழ்க்கையில் பெரிய பட்ஜெட்டில் ஓம் படம் தயாராகிறது. கார்த்திகேயன் என்ற கேரக்டரில் மம்முட்டி வருகிறார். மற்ற கேரக்டர் விவரம் விரைவில் வரும் அடுத்து டீசர், டிரைலர் வெளியீட்டு விழா இருக்கும்'' என்றார்.