முதல்வர் விஜய் உடன் சந்திப்பு பற்றி நெகிழ்ச்சி : லைக்குகளை அள்ளிய சமந்தா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் குறிப்பிடும்படியான வெற்றிப் படங்களில் நடித்தவர் சமந்தா. அவர் நடித்து நாளை வெளியாக உள்ள தெலுங்குத் திரைப்படம் 'மா இண்டி பங்காரம்'. அப்படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.
அதன் பத்திரிகையாளர் சந்திப்பிற்காக நேற்று சென்னை வந்தார் சமந்தா. பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு பக்கம் இருந்தாலும் முதல்வர் விஜய்யை சந்தித்ததுதான் அவருக்கு நேற்று ஹைலைட்டாக அமைந்தது.
விஜய், சமந்தா இருவரும் 'கத்தி, தெறி, மெர்சல்' படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். மூன்று படங்களுமே முக்கியமான வெற்றிப் படங்கள்.
முதல்வரை சந்தித்த பின் இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு நீண்ட பதிவு போட்டிருந்தார். அதற்கு லைக்குகள் அள்ளியது. சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் லைக்குகள் கிடைத்தது. தற்போது 3 மில்லியன் லைக்குகளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
அவருடைய நீண்ட பதிவில், முதல்வர் விஜய் பற்றி,
“இன்று நான் சென்னையில் தரையிறங்கியபோது, எனக்குள் ஒரு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது, ஏனெனில், நான் நமது முதல்வரை சந்திக்க சென்று கொண்டிருந்தேன். விஜய் சார் வெறும் திரையில் தோன்றும் ஒரு கதாநாயகனாக மட்டுமே இருக்கப் பிறந்தவர் அல்ல என்று எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அவரது ஆற்றல், ஆளுமை மற்றும் மக்கள் அவரிடம் காட்டும் ஈடுபாடு ஆகியவற்றைப் பார்க்கும்போது, அவர் ஏதோ ஒரு பெரிய நோக்கத்திற்காகவே உருவானவர் என்று தோன்றியது.
முற்றிலும் புதியதொரு களத்தில் அடியெடுத்து வைப்பதற்குத் தேவைப்படும் துணிச்சல்தான் என்னை மிகவும் ஈர்க்கிறது. ஏற்கனவே தேர்ச்சி பெற்ற ஒரு துறையை விட்டுவிட்டு, மிக உயர்ந்த சவால்கள் நிறைந்த ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுப்பது சாதாரணமானதல்ல. அது எளிதானது என்பதற்காக அல்ல, மாறாக ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையாலேயே அத்தகைய முடிவை எடுக்கிறோம்.
நமது வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில், நம்மை தாண்டி சிந்தித்து, சமூகத்திற்கு நாம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்று யோசிப்பதன் மூலம், இன்னும் பெரிய காரியங்களைச் செய்வதற்கான அழைப்பை நாம் அனைவரும் பெறுகிறோம் என்று நினைக்கிறேன். ஆனால், மிகச் சிலரே அந்த அழைப்பை ஏற்றுச் செயல்படுகிறார்கள்.
விஜய் சார், அவர் மீது ஏற்கனவே நம்பிக்கை வைத்திருப்பவர்களையும் ஆச்சரியப்படுத்துவார் என்று எனக்கு தோன்றுகிறது. அவர் வகிக்கும் பதவியின் காரணமாக அல்ல, மாறாக அவர் அந்தப் பணியை அணுகும் நோக்கத்தின் காரணமாகவே அவர் அப்படிச் செய்வார்.
அவருக்கு வலிமையும், ஞானமும், தனது பாதையில் உறுதியாகத் தொடர்வதற்கான துணிச்சலும் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.
மேலும், இதைப் பார்க்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு செய்தி: நீங்கள் முதலில் கண்ட கனவை விட, வாழ்க்கை மிகப்பெரியதாக அமையக்கூடும் என்பதை இது உங்களுக்கு நினைவூட்டுவதாக இருக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.