ஆர்ஜே பாலாஜியை கடுமையாக விமர்சித்த திருப்பூர் சுப்பிரமணியம்
சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடிப்பில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகி 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம் 'கருப்பு'. கடந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் அப்படியே தள்ளிப் போய் மே 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பைனான்ஸ் சிக்கல் காரணமாக அன்றைய தினம் வெளியாகவில்லை. படத்தின் நாயகன் சூர்யா சுமார் 60 கோடிக்கு உத்தரவாதம் கொடுத்ததாகச் சொன்னார்கள்.
அதனால், படம் ஒரு நாள் தாமதமாக மே 15ம் தேதி வெளியானது. படம் சிக்கலில் சிக்கிய போது அது குறித்து அழுது கொண்டே ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி. அதைப் பற்றித் தற்போது தியேட்டர் அதிபரும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“கருப்பு' படம் வெளியீட்டிற்கு இரண்டு நாட்கள் முன்னதாக எப்படி ஒரு சிக்கலில் சிக்கியது என்பது எங்களுக்கத் தெரியும். ஆனால், அதை எதிர்கொள்ள இயக்குனர் முன்வரவில்லை. அதற்குப் பதிலாக ஒரு வீடியோ போட்டு அழுதுவிட்டுப் போய்விட்டார். அதன்பின் படம் வெளிவந்ததும் வெற்றி அவரால் கிடைத்தது போல காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு நடக்கிறார்”.
ஒரு படத்திற்கு சுமார் 30 கோடி பட்ஜெட் என போட்டு 5 கோடி கூடுதலானால் பரவாயில்லை. ஆனால், அதைவிட இரண்டு மடங்கு அதிகமானால் தயாரிப்பாளர்கள் எப்படி சமாளிப்பார்கள்,” என்று கேட்டுள்ளார். 'கருப்பு' படம் கூட திட்டமிட்ட பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமானதால்தான் தயாரிப்பாளர் கடைசி நேரத்தில் பைனான்ஸ் சிக்கலில் மாட்டியதாக கோலிவுட்டில் பேச்சு உண்டு.