பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகும் 'விக்ரம்' பட நாயகியின் பேத்தி
பிரபல பாலிவுட் நடிகரான மறைந்த ராஜேஷ் கண்ணா மற்றும் நடிகை டிம்பிள் கபாடியா நட்சத்திர தம்பதியின் பேத்தியான நவோமிகா சரண் என்பவர் தற்போது பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். கடந்த 1986ல் கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் டிம்பிள் கபாடியா. தமிழில் அவர் நடித்த ஒரே படமும் இதுதான். தற்போது அவரது பேத்தி நவோமிகா சரண் புதிய காதல் கதை ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
சமீபத்தில் ஹிந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'ஜிக்ரா' படத்தில் கவனம் ஈர்த்த இளம் நடிகரான வேதாங் ரெய்னா இதில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இதில் இன்னொரு கதாநாயகியாக நடிகை பிரகதி ஸ்ரீவஸ்தவா இணைந்து நடிக்க இருக்கிறார். இது முக்கோண காதல் கதையாக உருவாக இருக்கிறது. இயக்குனர் ஜகதீப் சித்து இந்த படத்தை இயக்குகிறார்.. அந்த வகையில் பாலிவுட் சினிமா வாரிசு நடிகை பட்டியலில் லேட்டஸ்டாக இடம் பிடிக்கிறார் நவோமிகா சரண்.